Mansoor Ali Khan: நாடாளுமன்ற தேர்தல்.. ஆரணி தொகுதி வேட்பாளராக களமிறங்கும் மன்சூர் அலிகான்!
நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் களமிறங்கப் போவதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் களமிறங்கப் போவதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் களம் கண்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், போட்டியிடாத நிலையில் ஆதரவு கொடுப்பார்கள் என ஏகப்பட்ட எதிர்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு “தமிழ் ஜனநாயக புலிகள்” என்ற கட்சியை தொடங்கினார். அதாவது ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். இதன் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பல்லாவரத்தில் “தமிழ் ஜனநாயக புலிகள்” கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் ஜனநாயக புலிகள் கட்சி போட்டியிடும். நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னை நான் ஒரு நடிகனாக கருதவில்லை. தமிழ்நாட்டில் நடந்த ஏராளமான பிரச்சினைகளுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். என்னுடைய கட்சியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துள்ளனர். இந்தியா முழுவதும் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். தேசிய அளவில் தமிழ் ஜனநாயக புலிகள் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான தன்னுடைய அறிக்கையில், “நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான்வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் நிற்கிறார். மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே” என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மன்சூர் அலிகான் முன்கூட்டியே தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.