Ajith Vijay: ஒரு வேல இருக்குமோ! விஜய்க்கு ஆதரவு தருகிறாரா நண்பர் அஜித்? குஷியில் தவெக தொண்டர்கள்
கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ள அஜித் அணியின் சீருடை தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தில் இருப்பதால் அவர் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இந்திய திரையுலகில் தமிழ் திரையுலகின் அங்கமாக திகழும் ரஜினி – கமலுக்கு அடுத்த தலைமுறையில் அவர்களுக்கு நிகரான புகழுடன் உலா வருபவர்கள் நடிகர்கள் அஜித்தும், விஜய்யும் ஆவார்கள்.
அரசியலில் விஜய், கார் ரேஸிங்கில் அஜித்:
அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அரசியல் பிரவேசத்தை அறிவித்த விஜய் எச்.வினோத் இயக்கும் படமே தான் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று அறிவித்து, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார்.
நடிகர் அஜித்தும் சமீப காலமாகவே ஆண்டுக்கு ஒரு படம், இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என்றே நடித்து வருகிறார். துணிவு படத்திற்கு பிறகு அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச்சுடும் வீரர், பைக் கார் பந்தய வீரர், ட்ரோன் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் அஜித்.
விஜய்க்கு ஆதரவா?
துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் அஜித்தின் கார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. அஜித் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நேற்று தனது கார் ரேஸிங் அணியினருடன் அவர்கள் அணிக்கான சீருடையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியானது.
அஜித் வெள்ளை நிறம் பெரும்பான்மையாகவும், அதில் சிவப்பு, மஞ்சள் நிறம் உள்ள வகையில் ஆடை அணிந்துள்ளார். அஜித்தின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ரேஸிங் காருக்கும் இதே வண்ணத்தை வடிவமைத்துள்ளார். அஜித்தின் இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வரும் சூழலில், அஜித் மறைமுகமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார் என்று விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் வாக்குகள் யாருக்கு?
ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் நிறமும் சிவப்பு, மஞ்சள் வண்ணத்திலே அமைந்திருக்கும். அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தையும், விஜய் தவெக கொடியுடன் நிற்கும் புகைப்படத்தையும் இணைத்து ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அஜித்குமார் ஏற்கனவே தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை வாயிலாக தெரிவித்துவிட்டார். ஆனாலும், அவரது ரசிகர்களின் வாக்குகளை பெற ஒவ்வொரு முன்னணி கட்சியினரும் போட்டியிட்டு வருகின்றனர்.
சவாலாக மாறும் 2026:
விஜய் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நிலையில், வரும் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு பெரும் சவால் அளிக்கும் விதமாக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவரது போட்டி நடிகரான அஜித்தின் ரசிகர்களின் வாக்குகளை இழுக்கும் விதமாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் வியூகம் வகுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே அஜித்தின் ரேஸ் பயணத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அஜித்தின் கார் பந்தய அணியின் சீருடை மற்றும் பந்தய காரில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை முத்திரை இருந்தது அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறினர். ஆனாலும், அதன் பின்னணியில் அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெறுவது முக்கிய விஷயமாக அரசியல் வல்லுனர்களால் கருதப்பட்டது.
வரும் சட்டமன்ற தேர்தல் நாளுக்கு நாள் சவாலான சூழலை அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்களின் ரசிகர்களின் வாக்குகள் யாருக்கு செல்லப்போகிறது? என்பதும் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.