மயிலாடுதுறையில் சோகம்: வயதான தம்பதி விஷம் அருந்தி தற்கொலை - சொத்துப் தகராறா, உடல்நலக் குறைவா? போலீசார் விசாரணை..
மயிலாடுதுறை அருகே வயதான தம்பதியர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட மணக்குடி தெற்கு தெருவில், மகன்களுக்கு இடையேயான பராமரிப்பு தகராறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதியர்
மணக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (70 வயது) மற்றும் அவரது மனைவி மல்லிகா (65 வயது). இவர்களுக்கு செந்தில்குமார், ராஜிலு, தமிழ்வாணன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் இரண்டாவது மகன் ராஜிலு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜ் மற்றும் மல்லிகா தம்பதியினர் வெளிநாட்டில் இருக்கும் இரண்டாவது மகனின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளனர்.

வயதான இந்த தம்பதியினரை பராமரிப்பது தொடர்பாக மூன்று மகன்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். "யார் பெற்றோரை கவனிப்பது, பராமரிப்பு செலவுகளை யார் ஏற்குவது" என்பது போன்ற விஷயங்களில் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
உடல்நலக் குறைவும் ஒரு காரணமா?
மகன்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, செல்வராஜ் மற்றும் மல்லிகா தம்பதியினர் இருவரும் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. முதுமை காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களால் இவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். குடும்பப் பிரச்சனையுடன், உடல்ரீதியான உபாதைகளும் சேர்ந்து இவர்களை மனதளவில் கடுமையாகப் பாதித்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உறவினர்கள் அதிர்ச்சி
வழக்கமாக காலை வேளையில் வீட்டை விட்டு வெளியே வரும் செல்வராஜ், மல்லிகா தம்பதியினர், இன்று நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவர்களின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இருவரும் விஷம் அருந்திய நிலையில், உயிரிழந்து கிடந்தனர். இந்த பதைபதைக்கும் காட்சியைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

காவல்துறை விசாரணை
இதுகுறித்து உடனடியாக செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மகன்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்சனை மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவையே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அப்பகுதியில் சோகம்
வயதான தம்பதியினர் இவ்வாறு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணக்குடி தெற்கு தெருவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரைக் கவனித்துக் கொள்வதில் ஏற்படும் பிரச்சனைகள், பணப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலக் குறைவுகள் போன்ற காரணங்களால் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இச்சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் தற்கொலைக்கான உண்மையான காரணம், காவல்துறையின் விரிவான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். பெற்றோரைக் கவனித்துக்கொள்வது என்பது ஒவ்வொரு குழந்தையின் கடமை என்பதை இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்துகின்றன.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





















