தொடரும் சுருக்குமடி வலை பிரச்சினை - மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றம்....!
சுருக்குமடி வலை தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமையிலான மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டம்
தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் இன இருதரப்பு மீனவர்களால மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சி நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் வழிகாட்டுதலும் கூறி இருந்தது. ஆனால் அதனை சுருக்குமடிவலை பயன்படுத்தும் மீனவர்களால் முழுமையாக நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 மீனவக் கிராமங்கள் உள்ளன. கிராமங்கள் தனித்தனி அணியாக பிரிந்து சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். தரங்கம்பாடி மீனவர் கிராம தலைமையில் சுருக்குமடி வலைக்கு எதிராக பல்வேறு மீனவக் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேபோன்று பூம்புகார் தலைமையிலான சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை
இந்நிலையில் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த மீனவ கிராமங்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் உரிய முடிவு எட்டப்படாததால், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்றும் பயன்படுத்துவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீனவர்கள் போராட்டம்
இதனிடையே சுருக்குமடி வலை பயன்பாடு மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதாக கூறி சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராமங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் சாலை மறியல் போராட்டம் முடிவை கைவிட்டு, 20 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியல் மற்றும் கடை அடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் போது அரசு தரப்பிலான அதிகாரிகள் பங்கேற்று சுருக்குவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விளக்கத்தை மீனவ கிராம மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி போராட்ட இடத்தில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி மற்றும் அதிகாரிகள் வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், பதிவு செய்யப்படாத விசை படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சுருக்குமடி வலையை தடை செய்யும் வகையில் மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து கண்காணித்து வருவதாகவும், விதிமுறைகள் மீறி சுருக்குமடி, இரட்டை மடி வளைகள் மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சினை பயன்படுத்தினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று மீனவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிக கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால் மீண்டும் அனைத்து மாவட்ட மீனவ கிராமங்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக தரங்கம்பாடியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மீனவர்கள் போராட்டத்தால் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மூவாயிரத்திற்கும் அதிகமான பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியது.