புதுச்சேரி முதல்வர் ஓகே... தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார்? பி.ஆர்.பாண்டியன் கேள்வி..
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மீறும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறையில் காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: காவிரி ஆற்றில் கர்நாடக அரசு விதிமுறைகளை மீறி மேகதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கும் எதிராகச் செயல்படும் கர்நாடக அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழக எல்லைப்பகுதியான ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கு வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் வலுப்பெற்று வருகின்றன.
காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஐந்து நாட்கள் தொடர் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறைக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளையும் கண்டனங்களையும் முன்வைத்தார்.
பூம்புகாரில் தொடங்கிய விழிப்புணர்வுப் பயணம்
காவிரி ஆற்று நீர் உரிமையை மீட்கவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரப் பயணம், காவிரி ஆறு கடலுடன் சங்கமிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் பகுதியில் கடந்த 20ஆம் தேதி முறைப்படி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்கால், நாகப்பட்டினம், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வழியாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பொதுமக்களும் இப் பயணத்திற்குப் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். பயணத்தின் தொடர்ச்சியாக மயிலாடுதுறை வந்தடைந்த பி.ஆர். பாண்டியன், காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தைக் குறித்துத் தெளிவாக விளக்கினார்.
கர்நாடக அரசியல்வாதிகளின் சுயலாப அரசியல்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பி.ஆர். பாண்டியன், கர்நாடகத் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது சொந்த அரசியல் சுயலாபத்திற்காக மட்டுமே மேகதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். மேகதாட்டுவில் அணை கட்டுவதால் அங்குள்ள சாதாரண மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதை அம்மாநில விவசாயிகளே நன்கு உணர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே, மேகதாட்டு அணைக் கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகாவில் சமீபத்தில் கடந்த 13 -ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் அம்மாநில விவசாயிகளின் ஆதரவு இன்றி முற்றிலும் தோல்வியில் முடிவடைந்தது. கர்நாடக அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இரு மாநில மக்களிடையே இருக்கும் நல்லுறவைக் கெடுக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் கடமை
தொடர்ந்து பேசிய அவர், பற்றாக்குறை கால நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, தமிழகத்திற்குத் தினசரி 6,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபோதிலும், கர்நாடக அரசு அதனைச் சிறிதும் மதிக்காமல் தொடர்ந்து தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. ஒரு சுயாட்சி அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் தட்டாமல் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் உடனடியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டிய சட்டப்பூர்வ கடமை மேலாண்மை ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. எனவே, நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தத் தவறும் கர்நாடக அரசு மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ராசிமணல் அணை திட்டமும் தமிழக அரசின் நிலப்பாடும்
தமிழகத்திற்குரிய நதிநீர் பங்கீட்டை உறுதி செய்யவும், மேகதாட்டு அணைக்கு மாற்றாகவும், கடந்த காலத்தில் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ராசிமணல் பகுதியில் அணை கட்டப்பட வேண்டியது மிக அவசியமாகும். ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பான கோரிக்கைக்குப் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ஏற்கனவே தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தற்போது மேகதாட்டு அணைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், ராசிமணலில் அணை கட்டும் திட்டத்திற்குத் தமிழக முதலமைச்சரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இது குறித்துத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறைப்படி வலியுறுத்த உள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























