(Source: Poll of Polls)
தியாகி சாமி நாகப்பனின் 115 -ஆம் ஆண்டு நினைவு தின பேரணியில் போக்குவரத்து விதிமீறல் - அதிரடி காட்டிய காவல் ஆய்வாளர்
மயிலாடுதுறையில் தியாகி சாமி நாகப்பனின் 115 -ஆம் ஆண்டு நினைவு தின பேரணியில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வேனின் மேற்கூரையில் அமர்ந்து வந்த இளைஞர்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்று உயிர் தியாகம் செய்த சாமி நாகப்பன் படையாட்சியின் 115 -ஆம் ஆண்டு நினைவு தின பேரணியில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வேனின் மேற்கூரையில் அமர்ந்து வந்த இளைஞர்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் இளைஞர்களை கீழே இறங்கி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம்
1906 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று அப்போது மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார். காந்தியின் கட்டளைக்கு ஏற்ப பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, 1909 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன்.
உயிர் நீத்த தியாகி சாமி நாகப்பன்
தொடர்ந்து அங்குள்ள சிறையில் அடைப்பட்ட அவர் அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி தங்கவைக்கப்பட்டுள்ளார். இதனால் உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் அவருக்கு சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் சிறையில் ஏற்பட்ட பாதிப்புகளால் இரட்டை நுரையீரல் அழற்சியால் மரணத்தை தழுவினார். ஜோகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.
ஜோகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் நாகப்பனின் உருவ படம்
சாமி நாகப்பன் சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. தமிழ்நாட்டில் அவரது சொந்த ஊர், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஆகும். ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் நாகப்பனின் நினைவை போற்றும் வகையில் அவரின் உருவ படம் வைக்கபட்டுள்ளது.
மயிலாடுதுறையில் நினைவு தினம் அனுசரிப்பு
சாமி நாகப்பன் படையாட்சியின் 115 -ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சமூக நீதி சத்திரியர் பேரவை சார்பாக நினைவுநாள் பேரணி நடைபெற்றது. பேரணியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தவர்கள், மாவீரன் குரு வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே மணி தலைமையில் மயிலாடுதுறை காவல்நிலையம் அருகில் இருந்து பேரணியாக நடந்து சென்று கூறைநாட்டில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி திருவுருவ சிலைக்கு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார், மாவீரன் குரு வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அத்துமீறிய இளைஞர்
முன்னதாக ஊர்வலமாக வந்த பேரணியில் இளைஞர்கள் வேன் மேல்தளத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டனர். மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. இதனை பார்த்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்பிரியா வேனை நிறுத்தி இளைஞர்களை இறக்கி விட்டு எச்சரிக்கை விடுத்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.