இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள்; அதிகாலையில் பறிபோன 2 உயிர்கள்- சீர்காழி அருகே சோகம்
சீர்காழி அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதிகாலையில் நடைபெற்ற விபத்து
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 20 வயதான ஜஸ்வந்த், 17 வயதான கவின் மற்றும் 24 வயதான காளிதாஸ். இவர்கள் மூன்று பேரும் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் இன்று அதிகாலை வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ராதாநல்லூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இதில் மின்கம்பம் முற்றிலும் உடைந்த சரிந்துள்ளது.
இருவர் உயிரிழப்பு
மேலும் அதிகாலை பொழுது என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அவர்களை உடனடியாக பார்த்து மீட்க முடியாத நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்த கவின் (17), ஜஸ்வந்த் (20) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பொழுது விடிந்த நேரத்தில் இதனை கண்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வந்து படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த காளிதாஸ் (24) என்பவரை மட்டும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் இரண்டு பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து, இந்தவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த மூன்று இளைஞர்களும் சின்னங்குடி பகுதியில் நடைபெற்று வரும் இரவு நேர கபடி போட்டிக்கு சென்றதாகவும், இந்நிலையில் இன்று அதிகாலை சின்னங்குடி பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊரான திருமுல்லைவாசல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சோகத்தில் கிராம மக்கள்
திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிழந்த சம்பவத்தால் அக்கிராம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் இளைஞர்கள் எப்போதும் போக்குவரத்து விதிகளை மதித்து இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், தலைகவசம் அணிந்து செல்லவேண்டும், குறிப்பிட்ட வேகத்தை செல்ல வேண்டும் என்பதை கடைப்பிடித்தால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.
CM MK Stalin: ”மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாடல்..