தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்.. அச்சத்தில் வாகன ஓட்டிகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
சீர்காழி அருகே சென்னை- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்த கருவேல மரங்களால் விபத்து ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சென்னை- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்த கருவேல மரங்களால் விபத்து ஏற்படும் அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சி வழியே சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை NH 45A அமைந்துள்ளது. இந்நிலையில் நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதால் அரசு பேருந்து, பொது போக்குவரத்து மற்றும் கிராம புற போக்குவரத்திற்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் பகுதியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி என இருமார்த்திலும் அரசு பேருந்து, பயணிகள் தனியார் பேருந்து மற்றும் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வர பிரதான சாலையாகவும் இச்சாலை அமைந்துள்ளது.

24 மணி நேரம் வாகன போக்குவரத்து
இதன் காரணமாக 24 மணி நேரமும் ஓய்வின்றி வாகனங்கள் சென்று வரும் பரபரப்பான சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் சட்டநாதபுரத்தில் இருந்து சூரக்காடு வரையிலான சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. சாலையோரம் வளர்ந்த மரங்கள் வளைந்து தற்போது சாலையின் உள்ளே இரு புறமும் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது.

விபத்து ஏற்படும் அபாயம்
இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் சாலையின் இடது, வலது புறம் செல்ல முடியாமல் சாலையின் மையப்பகுதியில் மட்டுமே செல்கின்றன. இச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் பொழுது மையப்பகுதியில் செல்லும் நிலையில் விபத்து ஏற்படும் என்பதால் அச்சத்துடனேயே வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள் சாலையோரம் செல்லமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து கொண்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் கருவேல மரங்கள் இருபுறமும் ஆக்கிரமைத்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே சாலையோரம் ஆபத்தான நிலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






















