Book Fair 2025: கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக விற்பனையான புத்தகங்கள் - எங்கே தெரியுமா?
மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கடந்த ஆண்டை காட்டிலும் 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இந்தாண்டு 70 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.
3வது புத்தகத் திருவிழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3 வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்; மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் இணைந்து நடத்திய 3 வது புத்தகத் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த புத்தகத்திருவிழாவை கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதி இரவு பிற்படுத்தப்பட்டேர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவில் பிரபல வாய்ந்த சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.

விற்பனையில் சாதனை
இந்தாண்டு நடைபெற்ற இந்த புத்தகத்திற்கு விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத்திருவிழாவை விட அதிகளவில் விற்பனை நடைபெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ரூபாய் 37 லட்சத்து 71 ஆயிரத்து 500 மதிப்பிலான 18,972 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டு நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் 68 லட்சத்து 34 ஆயிரத்து 923 ரூபாய் மதிப்பிலான 64,726 புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. மேலும் 70 ஆயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
வெறிச்சோடி காணப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காரணம் இதுதான்..!

சிறப்பாக செயல்பட்ட துறைகள்
இப்புத்தகத் திருவிழாவில் புத்தக அரங்குகள் 66, அரசு திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் 8 என மொத்தம் 74 அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறைகளின் முயற்சியால் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி ஆணையர்கள் (மயிலாடுதுறை,சீர்காழி), பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பகழக முதுநிலை மண்டல மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலாகள், பத்திர பதிவுத்துறை, உதவி ஆணையர் கலால், மகளிர் திட்டம் ஆகிய துறைகள் இப்புத்தகத்திருவிழாவை சிறப்பாக நடத்த முழுவதுமாக செயல்பட்டுள்ளனர்.

2200 மாணவர்கள் விலையில்லா புத்தகங்கள்
மேலும் வர்த்தக சங்கம் சார்பில் 1200 மாணவர்களுக்கும், 800 மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பிலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 மாணவர்களுக்கும் என மொத்தம் 2200 அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விலையின்றி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை அதிகப்படுத்த இப்புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாவட்ட நிர்வாகமும் இதனை ஈடுப்பாட்டுடன் நடத்தியது. இவை அனைத்தும் மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே செய்ய முடிந்தது என புத்தகத் திருவிழா இறுதிநாளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




















