வெறிச்சோடிய மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் - இதான் காரணம்..!
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று ஆட்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Thaipusam Festival 2025: முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் திருவிழா தினமான இன்று அரசு பொது விடுமுறை என்பதால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதிகாரிகள், பொதுமக்கள் என யாரும் இன்றி வெறிச்சோடி உள்ளது.
தைப்பூசம் திருநாள்
தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் நன்னாள் மிகவும் சிறப்பாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5 -ம் தேதியே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு முருகப்பெருமான் கோயில்களில் விழா களைகட்டத் தொடங்கியது. இந்த சூழலில், இன்று தைப்பூசம் என்பதால் காலை முதலே முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

விண்ணைப் பிளக்கும் அரோகரா..முருகன் அரோகரா... கோஷம்
விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் தங்கத்தேரில் உலா வரும் நிகழ்வு பழமுதிர்ச் சோலை உள்ளிட்ட பல முருகன் கோயில்களில் நிறைவு பெற்றுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலை உள்ளிட்ட இடங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. முருகன் கோயில்களில் காலை முதல் கந்தனுக்கு அரோகரா..முருகன் அரோகரா.. என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.

முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்
குறிப்பாக, திருச்செந்தூர் மற்றும் பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணகக்கில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்த அறுபடை வீடுகள் மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்ட திருப்பரங்குன்றத்திலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை வரம் வேண்டி, திருமண வரம் வேண்டி, நல்ல வேலை வேண்டி பல பக்தர்களும் கோயில்களில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலும் கொண்டாட்டம்:
தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களிலும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு பால், நெய், திருநீர், இளநீர் என பல அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.
அரசு பொது விடுமுறை
கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத்தை தமிழ்நாடு அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் தைப்பூசம் நாளில் பொதுவிடுமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, இன்றய தினம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இதன் காரணமாக மயிலாடுதுறை எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடன் காணப்படும் பல்வேறு துறை அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் ஏழு தளம் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று அதிகாரிகள் , பொதுமக்கள் என ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.





















