மயிலாடுதுறையில் மெய்சிலிர்க்க வைத்த மிலாது நபி ஊர்வலம் - நபிகள் நாயக புகழ்பாடும் பாடிய மழலையர்கள்..!
மிலாட் நபியை முன்னிட்டு எலந்தங்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை ஏராளமான சிறுவர், சிறுமியர் பாடிச் சென்றனர்.

மயிலாடுதுறை: அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை உலகிற்கு உரக்கச் சொன்ன இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த திருநாள், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்களால் மிலாது நபி பண்டிகையாக மிகச் சிறப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனின் இறுதித் தூதரின் பிறப்பையும், அவர் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிய நன்னெறிகளையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புனித நாள் விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஜமாத்தார்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு தொழுகைகள், சொற்பொழிவுகள் மற்றும் பேரணிகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
எலந்தங்குடியில் கோலாகலத் தொடக்கம்
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவிற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க எலந்தங்குடி கிராமத்தில் மிலாது நபியை முன்னிட்டு ஜமாத்தார்கள் சார்பில் மிக பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எலந்தங்குடி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த ஊர்வலத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இஸ்லாமிய சிறுவர், சிறுமியர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.புத்தாடை அணிந்து, முகத்தில் புன்னகையோடு திரண்டு வந்த குழந்தைகள் அனைவரையும் அப்பகுதி மக்கள் அன்போடு வரவேற்று ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.
நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் பாடல்கள்
பேரணியின்போது கலந்துகொண்ட சிறுவர், சிறுமியர் அனைவரும் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் புகழைப் பாடும் திருப்பாடல்களையும், அவர் உலகிற்கு வழங்கிய உயரிய பொன்மொழிகளையும் ஒரே குரலில் முழங்கியபடி சீரான வரிசையில் அணிவகுத்துச் சென்றனர். 'அண்டை வீட்டாருடன் அன்பாக இருங்கள்', 'எளியோருக்கு உதவுங்கள்', 'உண்மையைப் பேசுங்கள்' போன்ற நபிகளாரின் உன்னத போதனைகளை பதாகைகள் வழியாகவும், பாடல்கள் வழியாகவும் மக்கள் மத்தியில் அவர்கள் விழிப்புணர்வாகக் கொண்டு சேர்த்தனர். குழந்தைகள் தங்களது அமுதக் குரலில் பாடிச் சென்ற இந்த நல்வாக்குகள், ஊர்வலத்தைப் கண்டுகளித்த அத்தனை பேரின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்வதாக அமைந்திருந்தது.
கிராமத்து வீதிகளில் தொடர்ந்த பேரணி
இந்த அமைதிப் பேரணியானது எலந்தங்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வழியாகக் மிக அமைதியான முறையிலும், அதேசமயம் எழுச்சியோடும் கடந்து சென்றது. பேரணி சென்ற பாதையெங்கும் வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்ற பொதுமக்கள், ஊர்வலத்தில் வந்த சிறுவர், சிறுமியருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் குழந்தைகளுக்குக் குடிநீர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு கிராமத்தின் மதநல்லிணக்கமும் சகோதரத்துவமும் பறைசாற்றப்பட்டது. குழந்தைகள் அனைவரும் அணிவகுத்துச் சென்ற காட்சி அப்பகுதி முழுவதையும் ஆன்மீகச் சூழலாகவும், விழாக்கோலமாகவும் மாற்றியது.
மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசலில் நிறைவு
ஊர்வலமாக வந்த சிறுவர், சிறுமியர் மற்றும் இஸ்லாமியப் பெரியோர்கள் எலந்தங்குடியின் பிரதான பகுதியைக் கடந்து இறுதியாக மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசலை வந்தடைந்தனர். அங்கு பேரணி முறைப்படி இனிதே நிறைவடைந்தது. பள்ளிவாசல் வளாகத்தில் கூடியிருந்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியப் பெரியோர்கள், வெயிலையும் பொருட்படுத்தாமல் நபிகளாரின் பெருமைகளைப் பாடியபடி ஊர்வலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் வெகுவாகப் பாராட்டினர்.
குழந்தைகளுக்குப் பரிசுகள் மற்றும் இனிப்புகள்
நிறைவு விழாவின்போது, பேரணியில் பங்கேற்று சிறப்பித்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியருக்கு இஸ்லாமியப் பெரியோர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அன்புடன் பிஸ்கட், சாக்லேட் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். பரிசுகளைப் பெற்றுக்கொண்ட குழந்தைகளின் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி வெளிப்பட்டது. இறுதியாக உலக அமைதி வேண்டியும், மனிதகுலத்தின் நலனுக்காகவும் சிறப்பு துஆ ஓதப்பட்டு, மிலாது நபி விழா நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
Before You Go
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















