பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதும்: இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் இலவசப் பயிற்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் TNPSC குரூப்-4 தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அரசுப் பணியில் சேரும் லட்சியத்தை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தற்போது தனது ஆண்டுத் திட்ட அட்டவணையின்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய கணிசமான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித் தகுதியாகப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் கூடுதல் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பிற நிபந்தனைகள் குறித்த முழுமையான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விரிவாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளாக எதிர்வவரும் நவம்பர் 5-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி அன்று மாநிலம் முழுவதும் திட்டமிடப்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலவசப் பயிற்சி வகுப்புகள்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்தத் போட்டித் தேர்வில் வெற்றிகரமாகப் பங்கேற்றுப் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்தப் பயிற்சி வகுப்புகள் தங்குதடையின்றி நடத்தப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் இந்த மையத்தின் மூலம் இளைஞர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் பாடத்திட்ட வழிகாட்டுதல்களும் அனுபவமிக்க வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருவது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் வாரத்தின் அனைத்து வர்க்க நாட்களிலும் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மயிலாடுதுறை பாலாஜி நகர் இரண்டாம் தெருவில் உள்ள பூம்புகார் சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. ஆர்வம் உள்ள தேர்வர்கள் இந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
கூடுதல் பயிற்சி வகுப்புகளும் மாதிரித் தேர்வுகளும்
வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு கூடுதல் நேரங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பிஎஸ்யூ அரங்கில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை பத்தரை மணி முதல் மாலை ஐந்தரை மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், வேலைநாட்களில் மாலை நேரப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்காகத் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரை வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும், தேர்வின் பயத்தைப் போக்குவதற்காகவும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பத் தொடர்ந்து மாதிரித் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாராந்திர மாதிரித் தேர்வுகள் எழுதுவதன் மூலம் மாணவர்கள் கால மேலாண்மையைக் கற்றுக்கொள்வதோடு, தங்களது பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் இந்த அருமையான வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் பாடத்திட்டங்களின் அடிப்படையில் முழுமையான பயிற்சிகள் அளிக்கப்படுவதால், மாவட்ட இளைஞர்கள் அனைவரும் இதில் தீவிரமாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய வசதியாக 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். மேற்கண்ட எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்வதோடு, நேரில் சென்று கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























