இந்த விசயத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தருவோம் - பிரேமலதா விஜயகாந்த்... எதற்கு தெரியுமா...?
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதை ஒருபோதும் தேமுதிக ஏற்று கொள்ளாது என்றும் அதற்காக தமிழக அரசுடன் இணைந்து ஆதரவு தருவோம் என திருக்கடையூரில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உலக புகழ் பெற்ற திருக்கடையூர் கோயிலில் நடைபெற்ற தேமுதிக துணை பொது செயலாளர் பார்த்தசாரதியின் 60 ஆம் திருமணத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது.
மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான்
புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் பல சிறப்புகள்
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
பார்த்தசாரதியின் சஷ்டியபூர்த்தி விழா
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் தேமுதிக மாநில துணை பொது செயலாளர் பார்த்தசாரதியின் 60 வயது பூர்த்தியையொட்டி திருக்கடையூர் கோயிலில் பார்த்தசாரதி - கற்பகம் தம்பதியினருக்கு சஷ்டியபூர்த்தி (60 கல்யாணம்) விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேரில் வந்து கலந்து கொண்டுள்ளார். முன்னதாக கோயில் வாசலில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு பிரேமலதா விஜயகாந்த்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயில் உள்பிரகாரத்தில் கஜபூஜை, கோ பூஜை செய்து உள்ளே சென்று கள்ளவர்ண விநாயகர், அமிர்தகரேஸ்வரர், காலசம்கார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று மனம் உருக வழிபாடு செய்தனர்.
இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிராசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பார்த்தசாரதி தம்பதியினரை வாழ்த்தி பரிசு வழங்கினர். அப்போது பார்த்தசாரதியின் பேரக்குழந்தையை தூக்கி கொஞ்சி முத்தமிட்டு கொஞ்சினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
செய்தியாளர் சந்திப்பில் கூறியது
தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது, அதன் அடிப்படையில் கலந்து கொண்டோம். கேப்டன் அவர்களின் கொள்கைப்படி அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழிகளும் கற்போம் என்பதையே நாம் வலியுறுத்தினோம். நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளை குறைத்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது, தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக முழு ஆதரவை கொடுக்கும் என தெரிவித்தார். மேலும் தமிழக முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக தெரிவித்தார். இன்றைய தமிழக பட்ஜெட் குறித்து முழுமையான தகவல் கிடைத்த பின் தலைமை கழகத்திலிருந்து அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

