மயிலாடுதுறையை மிரட்டும் ரவுடிகளுக்கு ரெட் அலர்ட்: 65 பேரை குண்டாஸில் தூக்கி எஸ்பி மாஸ் ஆக்ஷன்!
மயிலாடுதுறை எஸ்பி சினேஹா ப்ரியா பரிந்துரையின் பேரில் நடப்பாண்டில் 65 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை சார்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் போக்சோ சரித்திர பதிவேடு குற்றவாளி, மற்றொருவர் சட்டவிரோத மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழிப்பறி மற்றும் அரிவாள் தாக்குதல் சம்பவம்
கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி, மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பழைய ரயில்வே ரோடு பகுதியில் ஒரு கொடூர தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. மயிலாடுதுறை பிள்ளையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் சரவணன் (19) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரின் மகனும், போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளியுமான அபிநாத் (21) என்பவர் சரவணனை வழிமறித்துள்ளார்.
தொடர்ந்து மது குடிப்பதற்குப் பணம் கேட்டு மிரட்டிய அபிநாத், பணம் தர மறுத்த சரவணனை தான் வைத்திருந்த அரிவாளால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி அபிநாத்தைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சட்டவிரோத புதுச்சேரி சாராய விற்பனை வேட்டை
மற்றொரு சம்பவமாக, சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக புதுச்சேரி மாநில மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சீர்காழி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தொடுவாய் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி பரமேஸ்வரி (55) என்பவர், தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாகப் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரிடமிருந்த விற்பனைக்கான சாராயத்தைக் பறிமுதல் செய்த காவல்துறையினர், பரமேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
ஆட்சியர் உத்தரவு மற்றும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
கைது செய்யப்பட்ட அபிநாத் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரும் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால், அவர்களை சாதாரண சட்டங்களின் கீழ் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது என்பதைக் காவல்துறை உணர்ந்தது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
மாவட்ட எஸ்பியின் பரிந்துரையை பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தர பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், செப்டம்பர் 30-ஆம் தேதி குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் முறைப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடப்பாண்டில் 65 நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் மாவட்டத்தில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்ட 65 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 25 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 10 நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 21 நபர்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் அடங்குவர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் எச்சரிக்கை
மாவட்டத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், மற்றும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது எவ்வித தயவுமின்றி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Before You Go
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























