மயிலாடுதுறையே மெய்மறந்த இரவு: இசை வெள்ளத்தில் நனைந்த தருமபுரம் ஆதீனம்..
தருமபுரம் ஆதீன 26-வது குருமகா சந்நிதானத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சங்கீத சமர்ப்பணம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் நூற்றாண்டு விழா மிகுந்த பக்தி சிரத்தையோடும் கலை நயத்தோடும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
1971-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை சுமார் 48 ஆண்டுகாலம் தருமபுரம் ஆதீனத்தின் ஞானபீடத்தில் அமர்ந்து ஆன்மீகப் பணிகளையும், சைவ சமய வளர்ச்சியையும், தமிழ் இலக்கியப் பணிகளையும் செவ்வனே ஆற்றிய பெருமைக்குரியவர் 26-வது குருமகா சந்நிதானம். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது நினைவிற்கும் ஆன்மீகப் பங்களிப்பிற்கும் புகழஞ்சலி செலுத்தும் விதமாக நேற்றிரவு மயிலாடுதுறை ஸ்ரீஆனந்தபரவசர் பூங்காவில் அமைந்துள்ள அவரது குருமூர்த்தத்தில் 100 இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து வழங்கிய மாபெரும் சங்கீத சமர்ப்பணம் இசை நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
27-வது குருமகா சந்நிதானம் முன்னிலையில் களைகட்டிய இசை ஆராதனை
தருமபுரம் ஆதீனத்தின் தற்போதைய 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாசியுடனும், நேரடி முன்னிலையிலும் இந்தச் சிறப்பு இசை ஆராதனை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி ஸ்ரீஆனந்தபரவசர் பூங்கா வளாகம் மற்றும் குருமூர்த்தம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் நறுமண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தெய்வீகப் பொலிவுடன் காட்சியளித்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த புகழ்பெற்ற பாரம்பரிய கர்நாடக இசைக்கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். குருமூர்த்தத்திற்குச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இசைக்கலைஞர்களின் சங்கீத சமர்ப்பணம் மங்களகரமாகத் தொடங்கியது.
பாரம்பரிய வாத்தியங்களின் சங்கமமும் ராகங்களின் மழையும்
இந்த இசை ஆராதனையில் வாய்ப்பாட்டுக் கலைஞர்களுடன் நாகஸ்வரம், தவில், புல்லாங்குழல், வயலின், வீணை, சாக்ஸபோன், கஞ்சிரா, மிருதங்கம், பிடில், கடம், தபேலா உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்கும் 100 கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமித்தனர். இக்கலைஞர்கள் ஒவ்வொரு இசைக்கருவியையும் தனித்தனியாக இசைத்துத் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தியதோடு, அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நாதமாக வாசித்து குருமகா சந்நிதானத்திற்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
மங்கல இசையான மல்லாரியுடன் தொடங்கிய இக்கச்சேரியில் கம்பீர நாட்டை, ஸ்ரீராகம், சண்முகப்பிரியா, ஆபேரி, ஆபோகி, கீரவாணி, ரேவதி, அமிர்தவர்ஷினி மற்றும் நிறைவாகத் தில்லானா ஆகிய ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் மிக நேர்த்தியாக இசைக்கப்பட்டன. நூறு கலைஞர்களின் ஒருங்கிணைந்த நாத வெள்ளம் அந்த இரவு நேரத்தில் குருமூர்த்த வளாகம் முழுவதும் எதிரொலித்து, கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் பக்தர்களையும் ஆன்மீகப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வென்ஃப்லானுடன் வந்து வீணை வாசித்து நெகிழ வைத்த பெண் கலைஞர்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு விழா இசை நிகழ்ச்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது. நூறு கலைஞர்கள் ஒருசேர இசை வாத்தியங்களை வாசிக்கும் இந்தப் புனிதமான ஆராதனையில் பங்கேற்பதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த பெண் வீணைக்கலைஞர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால் 100 கலைஞர்கள் என்ற எண்ணிக்கை முழுமை பெறாமல் போய்விடும் என்பதாலும், குருமகா சந்நிதானத்திற்குத் தனது இசை அஞ்சலியைச் செலுத்த வேண்டும் என்ற உயரிய பக்தியாலும், அவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது மருத்துவமனையில் இருந்து நேராக விழா மேடைக்கு வந்தார். கையில் மருத்துவ சிகிச்சைக்கான வென்ஃப்லான் ஊசி பொருத்தப்பட்ட நிலையிலும், சற்றும் சளைக்காமல் அமர்ந்து சக கலைஞர்களுடன் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் வீணை வாசித்தது அங்கிருந்த பார்வையாளர்களையும், ஆதீனக் கர்த்தரையும் வெகுவாகக் கவர்ந்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கலைஞர்களின் இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவுற்ற இந்தச் சங்கீத சமர்ப்பணம் மயிலாடுதுறை ஆன்மீக மற்றும் கலை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















