நிலப்பிரச்சனையால் நேர்ந்த கொடூரம்: மயிலாடுதுறையில் முதியவரை கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி.
மயிலாடுதுறை அருகே கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில், தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலத்தகராறில் முதியவரைக் அடித்துக் கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பரபரப்பான கொலை வழக்கு ஒன்றில், தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலத்தகராறில் முதியவரைக் அடித்துக் கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: நிலம் தொடர்பான முன்விரோதத்தில் முதியவரைத் தாக்கி கொலை செய்த வழக்கில், முதியவர் மற்றும் அவரது உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி: பகையாக மாறிய நிலத்தகராறு
மயிலாடுதுறை உட்கோட்டம், செம்பனார்கோவில் காவல் எல்லைக்குட்பட்ட கிள்ளியூர், ராமன்கொட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் 62 வயதான சித்திரன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதே வயதுடைய பிச்சைக்கண்ணு (62) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பான இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலத்தகராறு நாளடைவில் இரு குடும்பங்களுக்கும் இடையே தீராத முன்விரோதமாக மாறியது.
இரத்தக் கறையான 2022 மார்ச் 29
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 29.03.2022 அன்று, இந்த முன்விரோதம் மீண்டும் வெடித்தது. பிச்சைக்கண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், சித்திரனின் குடும்பத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த பிச்சைக்கண்ணு தரப்பினர் சித்திரனைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த கட்டையால் சரமாரியாகத் தாக்கினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த சித்திரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செம்பனார்கோயில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து உயிரிழந்த சித்திரனின் மனைவி அஞ்சம்மாள் (58), செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் பிச்சைக்கண்ணு (62), பாலமுருகன் (40), ஜெயலெட்சுமி (55), பிரியா (28), காளியம்மாள் (35) 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
அப்போதைய செம்பனார்கோயில் காவல் ஆய்வாளர் செல்வி வழக்கை விசாரித்து, எதிரிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தார். தொடர்ந்து புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு: குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை
இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிச்சைக்கண்ணு மற்றும் பாலமுருகன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, பிச்சைக்கண்ணு (62) மற்றும் பாலமுருகன் (40) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகளுக்கு பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கறிஞர் மற்றும் காவல்துறைக்கு எஸ்பி பாராட்டு
இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்ததற்காக அரசு வழக்கறிஞர் இராம.சேயோன், முன்னாள் ஆய்வாளர் செல்வி, தற்போதைய ஆய்வாளர் கருணாகரன், நீதிமன்றத் தலைமை காவலர் பாலமுருகன் ஆகியோரை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் இராம.சேயோன் தொடர்ந்து இதுபோன்ற குற்றவாளிகள் திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனையான ஆயுள்தண்டனையை குறுகிய காலத்தில் பெற்று தருவது குறிப்பிடத்தக்கது.
























