மயிலாடுதுறை: சாக்கடை நீருக்குள் மிதக்கும் அம்மா உணவகம் - உணவின்றித் தவித்த ஏழை மக்கள்!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் புகுந்ததால் உணவு சமைக்க முடியாத சூழலில் ஏழை எளிய மக்கள் பசியுடன் திரும்பி சென்றனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தை ஒட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அம்மா உணவகத்தில், இன்று அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாதாள சாக்கடை கழிவுநீர் சமையல் அறைக்குள் புகுந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் உணவகத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதோடு, அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சமையல் கூடத்தை சூழ்ந்த கழிவுநீர்
மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் அரசு மருத்துவமனை அருகே ஏழை, எளிய மக்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் நோக்கில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று திடீரென அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை நீர் ஆகியவை அம்மா உணவகத்தின் சமையல் கூடத்திற்குள் புகுந்தது. சமையல் கூடம் முழுவதும் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி வழிந்தோடியதால், அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
உணவின்றித் திரும்பிய பொதுமக்கள்
சமையல் கூடம் முழுவதும் கழிவுநீர் கலந்த சாக்கடை நீர் சூழ்ந்ததால், இன்று பொதுமக்களுக்கு உணவு சமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. காலை உணவுக்காக வந்த நூற்றுக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உணவகத்தின் அவல நிலையைப் பார்த்து முகம் சுழித்தபடி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், "உள்ளே நுழைய முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. தரையெங்கும் சாக்கடை நீர் ஓடுவதால், பாத்திரங்களை வைக்கவோ அல்லது அடுப்பைப் பற்றவைக்கவோ இயலவில்லை. அசுத்தமான சூழலில் எப்படி உணவு சமைக்க முடியும்? இது மக்களின் உயிருடன் விளையாடும் செயலாகும்," என வேதனையுடன் தெரிவித்தனர்.
சாலைகளில் வழிந்தோடும் அவலம்
அம்மா உணவகத்திற்குள் தேங்கியது மட்டுமின்றி, கழிவுநீரானது சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வாகனங்கள் செல்லும் போது இந்த அசுத்த நீர் பாதசாரிகள் மீது தெறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தற்போது கோடைக்காலம் தொடங்கி வரும் வேளையில், திறந்தவெளியில் சாக்கடை நீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, மருத்துவமனைக்கு அருகிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடு நிலவுவது வேலியே பயிரை மேய்வது போன்றது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கை
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், தற்காலிகமாக மட்டுமே சீரமைப்புப் பணிகள் செய்யப்படுவதாகவும், நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில்,
"ஏழை எளிய மக்களின் பசியாற்றும் இடமான அம்மா உணவகத்தில் கழிவுநீர் புகுந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சாக்கடை நீரில் உணவு சமைப்பது சாத்தியமற்றது. இதனால் இன்று பலரும் பட்டினியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அடைப்புகளை நீக்கி, கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்."
நகராட்சி நிர்வாகத்தின் பதில் என்ன?
பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் அம்மா உணவகம் செயல்பட வழிவகை செய்யப்படும் என்றும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் அரசு மருத்துவமனையின் கழிவுநீர் மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதே மயிலாடுதுறை மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























