பயிர் காப்பீடு: நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்து இழப்பீட்டைப் பெறுங்கள்! விவசாயிகளுக்கு ஆட்சியரின் அழைப்பு
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் 2025-26 சம்பா நெல் (சிறப்புப் பருவம்) சாகுபடி செய்யும் விவசாயிகள் நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) தற்போது சம்பா (சிறப்புப் பருவம்) நெல் II பயிருக்குச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இயற்கை சீற்றங்கள், காலநிலை மாற்றம் மற்றும் எதிர்பாராத அபாயங்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது, விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைத்து, அவர்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் முக்கிய நோக்குடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திட்ட செயல்பாடு
மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICIL - Agricultural Insurance Company of India Limited) என்ற காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது.
தற்போது, நெல் சம்பா (சிறப்புப் பருவ) பயிருக்காக மாவட்டத்தின் 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் சம்பா சிறப்புப் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் கட்டாயமாக இத்திட்டத்தில் சேரலாம்.
காப்பீடு செய்வதற்கான முக்கிய காலக்கெடு
சம்பா (சிறப்புப் பருவம்) நெல் II பயிருக்கு காப்பீடு செய்வதற்கான இறுதி காலக்கெடு 2025 நவம்பர் மாதம் 15 -ஆம் தேதி ஆகும். எனவே, விவசாயிகள் காலதாமதமின்றி இந்தக் காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிரிமியம் மற்றும் காப்பீட்டுத் தொகை விவரங்கள்
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கான பிரிமியம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை: ரூ.36,500/-
* விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் விகிதம்: மொத்த காப்பீட்டுத் தொகையில் 1.5% மட்டுமே.
* நெற்பயிருக்கு ஏக்கருக்குச் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை: ரூ.547.50/- மட்டுமே.
எஞ்சிய காப்பீட்டுக் கட்டணத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியமாகச் செலுத்துகின்றன. மிகக் குறைந்த பிரிமியம் தொகையுடன், அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையைப் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
காப்பீடு செய்ய வேண்டியவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள்
சம்பா நெல் II (சிறப்புப் பருவம்) சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1. கடன்பெறும் விவசாயிகள்:
* தொடக்கம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும்போதே தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
2. கடன் பெறா விவசாயிகள்:
* கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்), அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்” (www.pmfby.gov.in) நேரிடையாகப் பதிவு செய்து நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்களை இணைத்து, பிரிமியம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்:
* முன்மொழிவு விண்ணப்பம் (Proposal Form).
* பதிவு விண்ணப்பம் (Registration Form).
* கிராம நிர்வாக அலுவலர் (VAO) வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல்/ இ-அடங்கல் சான்றிதழ்.
* வங்கிக் கணக்குப் புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல்.
* ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்.
விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்திய பின், அதற்கான இரசீதை பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும் ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்: "விவசாயிகள் பணம் செலுத்தும் போது, தாங்கள் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமம் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என மிகச் சரியாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் பிழை இருந்தால், காப்பீட்டுத் தொகை பெறுவதில் சிக்கல்கள் எழக்கூடும்."
எனவே, சம்பா (சிறப்புப் பருவம்) நெல் II சாகுபடி மேற்கொள்ளும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அனைவரும் விரைந்து நவம்பர் 15, 2025-க்குள் காப்பீடு செய்து, தங்கள் பயிரைப் பாதுகாத்து, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளுமாறு ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.






















