இலங்கையில் இந்திய மஞ்சளுக்கு கடும் கிராக்கி - மஞ்சள் கடத்த முயன்ற 5பேர் ராமநாதபுரத்தில் கைது
’’தற்போது இலங்கையில் நிலவும் தட்டுப் பாட்டால், ஒரு கிலோ மஞ்சள் 6,000 ரூபாயைத் தாண்டியிருக்கிறது’’
![இலங்கையில் இந்திய மஞ்சளுக்கு கடும் கிராக்கி - மஞ்சள் கடத்த முயன்ற 5பேர் ராமநாதபுரத்தில் கைது Turmeric shortage in Sri Lanka - 5 arrested for trying to smuggle turmeric in Ramanathapuram இலங்கையில் இந்திய மஞ்சளுக்கு கடும் கிராக்கி - மஞ்சள் கடத்த முயன்ற 5பேர் ராமநாதபுரத்தில் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/15/3f1415126744257d0a1f3fef800580f6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் ரோந்து சென்றபோது, தூத்துக்குடியை சேர்ந்த 'சுறா பாஸ்கர்' என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகு ஒன்றில் சோதனை செய்ததில், மஞ்சள் மூட்டைகளை கடலில் வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த நிர்மல் ராஜ், டோமினிக் சாவியோ, செல்வகுமார் மற்றும் கீதன் ஆகிய ஐந்து நபர்களையும் சுற்றி வளைத்து பிடித்த இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் தெற்கு கடல் பகுதிக்கு கொண்டு வந்து காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா, பீடி இலைகள், கடல் அட்டைகள், நட்சத்திர ஆமைகள், வெடிபொருள்கள் இவைகள்தான் பொதுவாகவே கடல் தாண்டிக் கடத்தப்படும் பொருள்களின் பட்டியலில் இருக்கும். வெளிநாடுகளுக்கு இவற்றை கடத்திச் சென்றால் லட்சக்கணக்கில் பணம் கொட்டும். ஆனால் சமீபகாலமாக, தமிழக கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு அதிக அளவில் மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது.
இலங்கையில், இலங்கையர்களின் பாரம்பரிய உணவுப்பொருளும் கிருமி நாசினியுமான மஞ்சள் தூளுக்கான தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்ட கடும் விலையேற்றமும் கடத்தல் கும்பல்களின் பார்வையை மஞ்சள் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றன. குறிப்பாக, இலங்கையில், குருநாகல், கம்பஹா, கண்டி, மாத்தளை, அம்பாறை மாவட்டங்களில் மஞ்சள் பிரதானப் பயிராக இருக்கிறது. கடந்த வருட இறுதியில், ‘உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்’ என்ற வகையில், வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இந்நிலையில், ‘கொரோனா வைரஸுக்கு எதிரான பொருளாக’ மஞ்சள் எல்லோராலும் பயன் படுத்தப்பட்டதால், அதற்கான நுகர்வு அதிகரித்ததுடன் தட்டுப்பாடும் உருவானது. இந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய மஞ்சள் உற்பத்தி இலங்கை நாட்டில் இல்லை. அங்கு, ஆண்டொன்றுக்கு 8,000 மெட்ரிக் டன் மஞ்சள் தேவை உள்ளது. ஆனால், 1,500 மெட்ரிக் டன் மஞ்சள் மாத்திரமே உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதியான மஞ்சள், இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. இறக்குமதிக்குத் தடைவிதித்ததால், மஞ்சளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ மஞ்சள் இலங்கை பணத்துக்கு ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்போது நிலவும் தட்டுப் பாட்டால், ஒரு கிலோ மஞ்சள் 6,000 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்தாலும் மஞ்சளை பெற முடியாத நிலை இருப்பதால், இலங்கையில் சமீக காலமாக தங்கத்திற்கு நிகராக மஞ்சளும் கிராக்கிப்பொருளாகி விட்டது. இதனால் மஞ்சள் அதிகம் விளையும் தமிழகத்திலிருந்து நாள்தோறும் தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் இந்திய கடலோர காவல் படையினர் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மண்டபம் தெற்கு கடலில் நேற்று இரவு 10 மணியளவில் இந்திய கடலோர காவல்ப்படையினர் ரோந்து செல்லும் போது, 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக, தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான *IND TN 10 MO 2497* என்ற எண் கொண்ட நாட்டுப் படகு ஒன்று கடல்பகுதியில் சென்று கொண்டிருந்ததை பார்த்து சோதனை செய்ய அருகே சென்றபோது வேகமாக தப்பிச் செல்லும் எண்ணத்தில் அனைத்து மஞ்சள் மூட்டைகளையும் கடலில் அறுத்து கொட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் நிர்மல் ராஜ், டோமினிக் சாவியோ, இன்பன்ட் விக்டர், செல்வகுமார், கீதன் ஆகிய ஐந்து நபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து நாட்டுப் படகுடன் மண்டபம் இந்திய கடலோர காவல்படை தளம் தெற்கு பகுதிக்கு கொண்டு வந்து தற்போது ஐந்து நபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)