தேனி : முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 119 அடி , வைகை அணையில் நீர் மட்டம் 54 அடியாக உள்ளது.
கோடை காலம் நெறுங்கும் நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை மற்றும் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர் பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 28-ந்தேதி 120.20 அடியாக இருந்தது. சராசரியாக தற்போதைய நிலவரப்படி 119.75 அடியாக குறைந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 467 கன அடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததாலும், தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சட்டென குறைந்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பின் நம்பர் இல்லாமல் டிஜிட்டல் பேமண்ட்...எப்படி சாத்தியம்? புதிய சேவையை அறிமுகம் செய்த பேடிஎம்!
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 54.66 அடியாக உள்ளது. இதில் 15 அடி முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது. வைகை அணையில் இருந்து தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகர், உசிலம்பட்டி, சேடப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை மட்டுமே இருப்பதால், தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. வருகிற ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் வைகை அணை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்