(Source: ECI/ABP News/ABP Majha)
வீட்டில் வளர்க்கப்பட்ட 11 அடி உயரமுள்ள கஞ்சா செடி. தந்தை மகன் கைது
தேவதானப்பட்டி குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி வழங்கப்பட்டு காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக கம்பம் விளங்குகிறது. இந்தப் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பத்திலிருந்து ஏராளமான வணிக ரீதியான போக்குவரத்துகள் தமிழக-கேரள இரு மாநிலங்களுக்குமிடையே இருந்து வருகிறது.
கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது. அதேபோலத்தான் இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது. ”கஞ்சா போதையினா அது கம்பம் கஞ்சா தான்” என்ற வசனம் பழைய மலையாள படங்களிலும் வந்துள்ளது. அது போலதான் கம்பத்தில் கிடைக்கும் கஞ்சாவின் போதைக்கு தனி மார்க்கெட் உள்ளது. கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில்தான் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் என்பவருக்கு தேவதானப்பட்டி 16வது வார்டு பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவர் வீட்டின் மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில், 11 அடி உயர கஞ்சா செடி இருப்பதை கண்டு அதை, உடனடியாக அங்கிருந்து அகற்றி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வீட்டின் அருகில் தடை செய்யப்பட்ட கஞ்சா செடி வளர்த்ததாக கூறி மாரியப்பன் அவரது மகன் பாலமுருகன் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தந்தை மாரியப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மகன் பாலமுருகன் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதால் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தேவதானப்பட்டி குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடி வழங்கப்பட்டு காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.