தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலைகள்: வேலைவாய்ப்பு, வர்த்தக புரட்சி! இந்தியாவின் எதிர்காலம் மாறும்!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கப்பல் கட்டுமான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு கொச்சின் SHIPYARD லிமிடெட் மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் முடிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மாநிலத்தின் பல மாவட்டத்தில் புதிய தொழிற்துறைகள் உருவாகி வருகிறது. உதாரணமாக திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் துறை, பெரம்பலூரில் காலணி உற்பத்தி, ஓசூரில் IT துறை, கோயம்புத்தூரில் icc நிறுவனங்கள், இதை தொடர்ந்து தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கப்பல் கட்டுமான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு கொச்சின் SHIPYARD லிமிடெட் மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் முடிவு செய்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கான முக்கிய கப்பல் கட்டுமான தளமாக தூத்துக்குடியை மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த திட்டங்கள் தூத்துக்குடியில் அமைப்பதற்கு தமிழ்நாட்டு மக்களின் திறன், உளகட்டமைப்பு மட்டும் காரணமில்லை, இந்த முடிவுகளை எடுக்க பல முக்கியமான விசயங்களும் உள்ளது.
கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் வணிக கப்பல் கட்டுமான தளத்தை அமைக்க உள்ளது. அதேபோல், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டுமான தளத்தை அமைக்க உள்ளது. இந்த இரண்டு நிறுவங்களின் திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் புதிதாக சுமார் 45,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது. மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம், தனது திட்டத்திற்கு 1,000 ஏக்கர் நிலம் கோரியுள்ளதாக இந்நிறுவன இயக்குநர் பிஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, அதன் பாறைத்தன்மையுள்ள கடற்பரப்பு காரணமாக கப்பல் கட்டுமான தொழிற்சாலைகளுக்கு ஏற்ற இடமாக உருவாகியுள்ளது. இந்த பாறை நிறைந்த கடற்பரப்பு, தொடர் பராமரிப்பு தேவையை குறைத்து அதிகப்படியான செலவுகளை நிறுவனங்களுக்கு மிச்சப்படுத்துகிறது.
கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் நிறுவனங்கள், இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களையும் ஆய்வு செய்து, தூத்துக்குடியை இறுதியாக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் பிற 2ஆம் நிலை துறைமுக நகரங்களை காட்டிலும் தூத்துக்குடியில் சாலை, ரயில், மற்றும் விமான இணைப்புகள், பசுமை எரிபொருள் வசதிகளின் வளர்ச்சி, மற்றும் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட கடற்கரை ஆகியவை கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் கப்பல் சேவையில் சுமார் 1,600 கப்பல்கள் உள்ளது, இது 14 மில்லியன் டன் மொத்த எடையை கொண்டு உள்ளது. இந்தியா மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக மாற வேண்டும் என இலக்கு வைத்திருக்கும் வேளையில் உலகளவில் இது 2 சதவீதம் மட்டுமே என்பது பெரும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
இதேபோல் இந்தியா வெளிநாட்டு கப்பல்களை குத்தகைக்கு எடுக்க ஆண்டுக்கு 75 பில்லியன் டாலர் தொகையை செலவு செய்கிறது. இந்த இடைவெளியை சரி செய்ய இந்தியாவில் அதிகளவிலான கப்பல் கட்டுமான தளங்கள் வேண்டும்.மேலும் இந்திய பதிய கப்பல்களை குறைந்த செலவில் வாங்க வேண்டும் என்றால் சீனா தான் ஓரே தீர்வு, இப்படியிருக்கையில் சீனாவின் கப்பல் கட்டுமான தளங்கள் 2028 வரை முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்நாட்டு கப்பல் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலைகள், இந்தியாவை கப்பல் கட்டுமானத்திலும், வர்த்தகத்திலும் சுயசார்பு நோக்கி நகர்த்தி, உலக சந்தையில் போட்டிப்போடும் அளவுக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















