மேலும் அறிய
Advertisement
சாத்தான் குளம் கொலை வழக்கில் கைதான காவலரின் ஜாமீன் மனு தள்ளுபடி
"மனுதாரர் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் கோரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்’’
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் முருகன், தனது சகோதரி மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பெனிக்ஸ், காவல்துறையினரால் சித்தரவதை செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முருகன் இடைக்கால ஜாமீன் கோரி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து, தற்போது சிபிஐ காவல்துறையினர் வழக்கை விசாரித்து முடித்துவிட்டனர். டிசம்பர் 10ஆம் தேதி எனது சகோதரியின் மகன் திருமணம் நடைபெற உள்ளது. தாய்மாமன் என்ற முறையில் நான் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். எனவே டிசம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "மனுதாரர் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் கோரலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி
மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த செய்யதுபாபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சி உட்பட்ட ஆழ்வார்புரம் 35ஆவது வார்டு 1978 - 1982 வரை பொது வார்டாக இருந்தது. தற்போது, வார்டு மறுவரை ஆணையம் தரப்பில் மதுரை மாநகராட்சி ஆழ்வார்புரம் 35 ஆவது வார்டானது 30ஆவது வார்டாக மாற்றப்பட்டு, ஆதிதிராவிட பெண்கள் வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆழ்வார்புரம் புதிய 30 ஆவது வார்டானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் (பெண்கள்) வார்டு அல்லது ஆதிதிராவிடர் வார்டாக இருந்து வருகிறது. ஆழ்வார்புரம் புதிய வார்டு 30ல் 13,890 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1000 வாக்காளர்கள் மட்டுமே ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வார்டு மறு வரையறையை செய்ய வேண்டும். ஆனால், 40 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் பெண்கள் வார்டு அல்லது ஆதிதிராவிடர் வார்டாகவே இருந்து வருகிறது.
எனவே, ஆழ்வார்புரம் புதிய வார்டு 30யை பொது வார்டாக மாற்ற மதுரை மாநகராட்சிக்கு 2021 நவம்பர் 13ஆம் தேதி மனு செய்துள்ளேன். அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "இது போன்ற பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் இல்லாத பகுதி ஆதிதிராவிட வார்டாக மாற்றப்பட்டுள்ளதாகவும், தெருக்களை மற்றொரு வார்டுடன் இணைக்கத்திருப்பதாகவும் வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில்," நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் 4 மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைந்து நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இது போன்ற அனைத்து வழக்குகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
அரசியல்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion