சபரிமலை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு பம்பை கணபதி கோயிலில் அஷ்டபந்த கலச பூஜை! பக்தர்கள் தரிசனம்
சபரிமலையில் பம்பையில் உள்ள கணபதி கோவிலில் அஷ்டபந்த கலச பூஜை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
இக்கோவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சபரிமலை கோயில் ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சபரிமலை ஏற்றத்திற்கு முன்பு பம்பை நதிக்கரையில் புனித நீராடி அங்குள்ள கன்னிமூல விநாயகர் கோயில் வழிபாடு செய்த பின்பு சபரிமலைக்கு செல்வர்.

தென்னகத்தின் கங்கை என அழைக்கப்படும் பம்பை நதிக்கரையில் அமைந்திருப்பது கன்னிமூல விநாயகர் கோயில். புண்ணிய நதி பம்பையில் குளித்து நதிக்கரையில் உள்ள கன்னிமூல கணபதியை வணங்கி, அவருக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் தங்கள் பயணத்தை தொடருகின்றனர். நீலிமலையும், செங்குத்தான் அப்பாச்சி மேடும் கடக்கும் பயணம் மங்களகரமாக நிறைவேற கணபதியின் அருள் வேண்டப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை பம்பை கணபதி கோவிலில் அஷ்டபந்த கலச பூஜை தொடங்கி நாளை ஞாயிற்று கிழமை வரையில் நடைபெறவுள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த பூஜை வழிபாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

இதையொட்டி ஆச்சார்ய வாரணம், சுத்தி கிரியை பூஜைகள் நடக்கிறது. கணபதி ஹோமம், பிம்ப சுத்தி கிரியை பூஜைகள், மாலையில் பிரம்ம கலச பூஜை, பரிகலச பூஜை, ஆதிவாச ஹோமம் நடக்கிறது. விழாவில் நாளை காலை 10.15 மணி முதல் 11 மணிக்குள் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ம தத்தன் மற்றும் மேல் சாந்திகள் மாதவன் போற்றி, பிரதீப் தலைமையில் அஷ்ட பந்த கலச பூஜை நடைபெறுகிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், கலசத்திங்கலில் உஷபூஜை, மரபாணி, அஷ்ட பிரம்ம கலசாபிஷேகம், பரி கலசாபிஷேகம், பிரசன்ன பூஜை போன்ற சடங்குகள் நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை வழிபாடுகளில் நேரில் பங்கேற்க பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கலச பூஜை நடைபெறும் நாட்களிலும் பக்தர்கள் நேரில் காணவும், தொட்டு வணங்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பக்தர்கள் சரண கோசங்களுடன் பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.





















