பழனி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றம் கோலாகலம்! இலவச தரிசனம் அறிவிப்பு, பக்தர்கள் உற்சாகம்!
அரோகரா' கோஷம் விண்ணதிர, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் . இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு.

தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோவில் பழனி முருகன் கோயில். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதுதான்.
இந்த நிலையில், பழனி திரு ஆவினன்குடி திருக்கோயிலில் இன்று காலை பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சேவல் மற்றும் மயில் உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி மற்றும் கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பங்குனி உத்திரத் திருவிழாவின் சிறப்பம்சமாக, ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துப் பாதயாத்திரையாக வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கமாகும். அந்த வகையில், விழாவின் முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம் மற்றும் கொடுமுடி ஆகிய இடங்களிலிருந்து கங்கை, யமுனை, சரஸ்வதி மற்றும் காவிரி தீர்த்தங்களைக் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மூலவருக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில், வரும் மார்ச் 31-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழுவினர், இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன.பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைவரும் எளிதாகத் தரிசனம் செய்யவும் கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் அனைத்து பக்தர்களும் கட்டணமில்லா பொது தரிசன வரிசையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அன்னதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் மிகச்சிறப்பாகச் செய்துள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















