மேலும் அறிய
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
இரண்டு ஆண்டுகளில் 512 நூல்களை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் மாணவர்கள் வாசித்துள்ளனர்.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
Source : whatsapp
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களின் மாபெரும் வாசிப்புத் திருவிழா.
நான்கு நூல்கள் வெளியீடு
புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கியக் கூடுகையில் பெரும்பாலான எழுத்தாளர்களும், தமிழறிஞர்களும் முன் வைக்கும் கருத்து இன்றைய தலைமுறையினருக்குப் வாசிப்புப் பயிற்சி இல்லை என்பதாகும். இக்குறையினை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றி வருவது பாராட்டிற்குரியது.
மன்னர் கல்லூரியின் மாணவர்களால் திறனாய்வு, தனிமனித வரலாறு, சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்களென நான்கு நூல்கள் கடந்த 10.07.2026 அன்று வெளியிடப்பட்டன.
வாசிப்பு முற்றம்:
தமிழ் உயராய்வு மைய உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி, பொதுத்தமிழ் படிக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது, ‘வாசிப்பு முற்றம்’ எனும் தலைப்பில், தினந்தோறும் 10 நிமிடங்கள் ஒரு நூலை வாசித்து அதனைத் திறனாய்வு செய்ய வழிகாட்டுகிறார். அதன்படி ஒரு மாணவரை முன்குறித்து அவர் விரும்பிய நூல் ஒன்றினை எடுத்து வாசித்து வரச் சொல்லி, அந்நூல் பற்றி வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் கவனிக்கும்படி திறனாய்வு செய்கின்றனர். இவ்வாறு தினந்தோறும் செய்து வருவதால், மாணவர்களுக்கு மேடைப்பயம் மற்றும் கூச்சம் விலகுகின்றது. அது மட்டுமின்றி, வாசிப்புப் பழக்கமும் வளர்ந்து கொண்டே வருகின்றது.
நூல் வெளியீட்டுத் திட்டம்:
வாசிப்புப் பயிற்சியை மட்டும் அளிக்காமல், தொடர்ந்து மாணவர்கள் திறனாய்வு செய்து எழுதிய குறிப்புகளைச் செம்மையாக்கி அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு வருகிறார் முனைவர் சே.முனியசாமி. இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் 262 நூல்கள் மாணவர்களால் திறனாய்வு செய்யப்பட்டு ஆறு நூல்களாக வெளிவந்துள்ளன. இதில் அறிவுக்கு வெளிச்சம், வாசிப்புத் திருவிழா, வாசிப்புச் சுற்றுலா, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள் (1969-2025) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் 250 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இப்பயிற்சி மாணவர்களை இளம் படைப்பாளர்களாக உருவாக்கியுள்ளது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் மாணவி ச.கார்த்தி செல்வியின் ‘பெண் பிள்ளை’ சிறுகதைத் தொகுப்பு, மாணவி அ.லாவண்யா மொழிபெயர்த்த ‘போர்க் கலை’ ஆகிய நூல்கள் விளங்கும்.
மாணவர்கள் 512 நூல்களை எடுத்து வாசித்துள்ளனர்.
இதுவரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல், வணிகவியல், பொருளியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் 512 நூல்களை எடுத்து வாசித்துள்ளனர். இன்றைய மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் மேம்பட்டுள்ளது என்பதற்கு இந்நூல்களே சான்றுகளாகும். இந்த வாசிப்பு முற்றத்திற்கும், நூல் வெளியீட்டுத் திட்டத்திற்கும் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை நல்கி நிதி உதவியும் அளித்து வருவது கூடுதல் சிறப்பாகும். 10.7.2026 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா மன்னர் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கு.சாமிதுரை அவர்களும், புனித அருளானந்தர் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ச.வின்சென்ட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் உயராய்வு மையப் பேராசிரியர்கள் அனைவரும் விழா ஏற்பாட்டினைகச் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















