Palani Murugan temple: பழனி கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்கப்படவில்லை; வழக்கு தொடுத்தவர் அதிரடி புகார்
பழனி கோயிலில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கு தற்போது வரை பில் வழங்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தில் திருக்கோயில் நிர்வாகம் கூறியவாறு நடைமுறைபடுத்தவில்லை.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழனி கோவில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்க பிரத்யேக ஆலை அமைக்கப்பட்டு நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பழனி கோவிலில் மேல்பிரகாரம், அடிவாரம் பாதவிநாயகர் கோவில், கிரிவீதி, வின்ச் மற்றும் ரோப்கார் நிலையம் மற்றும் பேருந்துநிலையம் என பல்வேறு இடங்களில் 10 க்கும் மேற்பட்ட பஞ்சாமிர்தம் ஸ்டால் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
500 கிராம் அளவுள்ள பஞ்சாமிர்தம் 40 ரூபாய் மற்றும் 45ரூபாய் என இருவேறு வகை டப்பாக்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பக்தர்களுக்கு முறையான பில் வழங்காமல் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து பழனியை சார்ந்த முருக பக்தரான செந்தில்குமார் என்பவர் பக்தர்களும் கோயில் நிர்வாகம் விற்பனை செய்யும் பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்க உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும்போது பக்தர்களுக்கு பில் வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனை ஸ்டால்களில் தற்போதுவரை பில் இல்லாமல், பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் பில் வழங்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த செந்தில்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது :-
மதுரை உயர்நீதிமன்றத்தில், பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விற்பனைக்கு பில் வழங்கப்பட்டு வருவதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக பில் வழங்குவது போன்ற புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பித்தனர். மேலும் பில் வழங்குவதில் சர்வர் பிரச்சனை ஏற்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. செல்போன் வாங்கி வைக்கவும், ரோப்கார் மற்றும் வின்ச் டிக்கெட் விற்பனை செய்வது, கட்டளை பூஜைகளுக்கும், தரிசன டிக்கெட் என அனைத்திற்கும் கணினி மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு எல்லாம் சர்வர் பிரச்சனை ஏற்படாமல் சரியாக செயல்படும்போது, பஞ்சாமிர்தம் விற்பனைக்கு பில் வழங்குவதில் மட்டும் சர்வர் பிரச்சனையை காரணம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை என்றும், பஞ்சாமிர்த விற்பனையில் பக்தர்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என்றும், பஞ்சாமிர்த விற்பனைக்கு பில் வழங்கினால் பக்தர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.,
எனவே நீதிமன்றத்தில் தவறான தகவலை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பழனி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு, தற்போதுவரை பில் வழங்காமல் விற்பனை செய்யும் திருக்கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.