அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்லலாம்: கேரள வனத்துறை அனுமதி
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காககட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி.
முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர். அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளதாக கூறிய போதிலும் அந்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.
இதனால் கடந்த 8 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இச்சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் 8 நாட்களாக அனுமதி கிடைக்காமல் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் அனுமதி கடிதம் தங்களுக்கு கிடைத்தால் மட்டுமே தமிழக வாகனங்களை அனுப்ப முடியும் என்று கேரள வனத்துறையினர் பிடிவாதமாக இருந்தனர்.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் தடவாளப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகைகளில் கேரள வனத்துறையால முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாகவும் கேரள அரசை கண்டித்து தமிழக, கேரள எல்லையில் விவசாய சங்கத்தினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சங்கத்தினர் முல்லை பெரியாறு அணைக்கு பராமரிப்பு பொருட்களை கொண்டு செல்ல தடுத்த கேரள வனத்துறையினரை கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் , ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில் தற்போது குமுளி வட்டம் சோதனைசாவடியில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருள்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் (நீர்வளத்துறை)அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கேரள அரசின் மூலம் வல்லக்கடவுசோதனைச் சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லைபெரியாறு அணைப் பகுதிக்குக் கட்டுமான பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என தேனி மாவட்டஆட்சித்தலைவர் திருமதி தெரிவித்துள்ளார்.