அரசுப் பள்ளிக்கு பணம் வாங்காமல் பூச்சு வேலை.. மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு
கட்டிட பணியாளர் அழகு முருகன் அவர்களின் தன்னலம் கருதாத நெகிழ்வான செயலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. என் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுத்த இப்பள்ளிக்கு எனது உழைப்பிற்கான கூலியை பெறாமல் விரும்பி மகிழ்ச்சியுடன் இந்தப் பள்ளிக்காக அர்ப்பணிக்கிறேன்.
அரசுப் பள்ளியில் படித்த கொத்தனார் மகன்
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரம் கிராமத்தில் வசிக்கும் அழகு முருகன் என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பீமன் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்து, தற்போது பீமன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதாரம் (Bachelor of Economics) படித்து வருகிறார்.
வறுமையான சூழலில் படித்துவரும் பீமன், தான் படித்த பள்ளியில் அவ்வப்போது சமூக பணிகளையும் செய்து வருகிறார். இதனால் தொடர்ந்து பீமனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளி நெருக்கமாக இருந்து வருகிறது.
- விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கெங்கு? எத்தனை பேருந்துகள்?
பள்ளிக்கு இலவசமாக பணி செய்த கொத்தனர்
இந்நிலையில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு மராமத்துப் பணிகளை சரி செய்வதற்காக கொத்தனார் அழகு முருகனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் அழைத்திருந்தனர்.
கடந்த 3 நாட்களாக பள்ளிச் சுவர்களில் பூச்சுப் பணி, வெள்ளை அடித்தல், வளாகத் தூய்மை என பல்வேறு வேலைகளை கொத்தனார் அழகு முருகன் செய்தார். வேலையை முடித்த பிறகு தலைமை ஆசிரியர் தனபால் அவருக்குரிய 3 நாள் கூலியை கொடுத்தபோது பெற மறுத்துவிட்டார்.
கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை
இதுகுறித்து கொத்தனார் அழகுமுருகன் கூறுகையில்...,”என் மகன் பீமன் போன வருசம் தான் இந்த பள்ளிக் கூடத்தில் +2 படித்து முடிச்சுட்டு, திண்டுக்கல்லில் காலேஜ் படிக்கிறான். எனது மகனின் பள்ளி வாத்தியார் முருகேசன் பசங்க நல்லா படிக்கணும்னு ஃபேன், பள்ளிக்கு பெயிண்டிங், பரிசுப் பொருட்கள், சேர் - டேபிள்னு என்று தேவையான உதவிகளை பொது மக்களிடமிருந்து பெற்று பள்ளிக்குத் தந்துள்ளார்.
இந்நிலையில் எங்களின் சார்பாக நாங்களும் பள்ளி வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்ய ஆசைப்பட்டோம். ஆனால் கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. என் மகனுக்குக் கல்வி கற்றுக்கொடுத்த இப்பள்ளிக்கு எனது உழைப்பிற்கான கூலியை பெறாமல் விரும்பி மகிழ்ச்சியுடன் இந்தப் பள்ளிக்காக அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் கொத்தனாரின் அழகு முருகனின் செயல் பலரது பாராட்டை பெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் கொத்தனார் அழகுமுருகனுக்கு சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு
பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தனது மகனின் கல்விக்கு உறுதுணையாக இருந்த எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊதியம் பெறாமல் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட உத்தபுரத்தை சேர்ந்த கட்டட பணியாளர் அழகு முருகன் அவர்களின் தன்னலம் கருதாத நெகிழ்வான செயலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கலைஞரின் கனவு இல்லத்திற்கு பேரம் பேசி காசு வாங்குபவர்கள் இதைவிட பிச்சை எடுக்கலாம் - அமைச்சர் துரைமுருகன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - MK Stalin: "இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி"..ஆனால் பாஜகவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்