காவல்துறையினர் ஏற்கெனவே அதிக அழுத்தத்தில் உள்ளனர் - மதுரை மாவட்ட நீதிமன்றம்
காவல்துறையினர் ஏற்கெனவே அதிக அழுத்தத்தில் உள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் 10 கோடி இல்லை என அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல - நீதிமன்றம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதனடிப்படையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கும் பிறகு சிபிஐக்கும் மாற்றப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆஜராகி, "காவல்துறையினரின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இது தற்போது நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி அந்தத்திட்டம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது” என குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், “காவல்துறையினர் ஏற்கனவே அதிக அழுத்தத்தில் உள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ரூ.10 கோடி இல்லை என அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல" என குறிப்பிட்டனர்.
அதற்கு அரசுத்தரப்பில், அது தொடர்பாக உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், "கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்காமல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகவே அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிக்கச் சென்ற போது, அவரை தரக்குறைவாக திட்டியதாக 3 காவலர்கள் மீது பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கோடு, நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்து வழக்கையும் சேர்த்து ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்