திண்டுக்கலில் ஒரே மாதத்தில் 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் , தொடர்ந்து கொலை , கொள்ளை , கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளைகள் அதிக அளவு நடந்துவருகின்றன. இளம் வயதில் கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதே போல கஞ்சா மற்றும் குட்கா, போதை பொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. இவற்றை தடுப்பதற்கு ஆங்காங்கே கஞ்சா வழக்குகளும், போதை பொருள் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதேபோல் செயின் பறிப்பு, மணல் கடத்தல், மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்தல், போதைப்பொருள் கடத்தல் என ஏராளமாக நடக்கிறது. இந்நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இருந்தாலும் குற்றவாளிகள் ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் ஜாமீன் பெற்று மீண்டும் வந்து அதே தொழிலை செய்கின்றனர்.
இதனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை. குற்றவாளிகளால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் குற்றவாளிகளை கைது செய்வதில் கவனத்தை செலுத்தினார். இதனால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு ஒரே மாதத்தில் 24 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திண்டுக்கல்லில் கடந்த மாதம் பர்னிச்சர் கடை உரிமையாளர் மணிகண்டன் (48). இவர் திண்டுக்கல் மாநகராட்சி வளாகத்தில் பர்னிச்சர் கடையில் இருந்தார். இவரது கடைக்கு இரவு 7 மணிக்கு புகுந்த கொலை கும்பல் சரமாரியாக இவரை, வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் கருப்பாயிரம் என்ற மூர்த்தி, பெருமாள் என்ற மயில், கணேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி.ஸ்ரீனிவாசன் பரிந்துரை படி மாவட்ட ஆட்சியர் விசாகன் 3 பேரையும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் திண்டுக்கல் அருகே தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்திய 4 பேர் குண்டர் சட்டம் போடப்பட்டது. வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் லாரி மற்றும் காரில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆயிரம் கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தனர். இது தொடர்பாக திண்டுக்கல், சேலம் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த கனவா சாதிக் அலி, சிக்கந்தர், ரபிக் மற்றும் சிவக்குமார் ஆகிய நான்கு நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கனவா சாதிக் அலி, சிக்கந்தர், ரபிக் மற்றும் சிவக்குமார் ஆகிய நான்கு நபர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன் கூறியதாவது குற்றவாளிகள் எந்த கோணத்தில் வந்தாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம். சமூக விரோத செயல்களை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசும் மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளனர். மணல் கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல், செயின் பறிப்பு, மதுபாட்டில்கள்,
கஞ்சா விற்பனை உட்பட அனைத்து வழக்குகளிலும் குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் வழக்குகளின் தன்மைகள் தீவிரப் படுத்தப் படுகிறது. இதற்கு இரவு பகலாகப் பாடுபடும் போலீசாரை நான் பாராட்டுகிறேன். ஒரே மாதத்தில் 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது, ஒரு சாதனையாக கருதவில்லை. இன்னும் பல சாதனைகளை நாங்கள் அடைய வேண்டி உள்ளது. அதனால் பொதுமக்களும் சமூக விரோதிகளை ஒழிப்பதற்கு போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.