Cracker Factory Accident : விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர், சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசி மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள சாத்தூர், விருதுநகரின் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே அமைந்துள்ளது மஞ்சள் ஓடைப்பட்டி. இந்த கிராமத்தில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல கருப்பசாமி மற்றும் பணியாளர்கள் பட்டாசு தொழிற்சாலை வேலை பார்த்து வந்தனர்.
அப்போது, பட்டாசு ஆலையில் பட்டாசு மருந்துகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் அங்கிருந்தவர்கள் தீக்காயங்களுடன் ஆலையின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த வெடிவிபத்தால் ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார் மற்றும் காசி ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்த ஆலை முறையாக பதிவு செய்யப்பட்டதா? என்றும், விபத்திற்கான காரணம் என்பது குறித்தும் அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு இதே விருதுநகர் மாவட்டத்தின் களத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 8 பேர் வரை உயிரிழந்திருப்பது அந்த பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்று பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்