பழனி அருகே பாலாறு அணை பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் முகாம்: அச்சத்தில் விவசாயிகள்
10-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விரட்டிய நிலையில் மீண்டும் காட்டுயானைகள் அணை பகுதியில் முகாமிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணை பகுதியில் முகாமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விரட்டிய நிலையில் மீண்டும் காட்டுயானைகள் அணை பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பழனி அருகே மேற்கு தொடர்சி மலையை யொட்டியுள்ளது பாலாறு பொருந்தலாறு அணை. இப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகளின் வருகை சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. அதேசமயம், இந்த யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்துவிடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். தற்போது 15-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் அங்கு முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Train berth collapses: சரியாக மாட்டாமல் சென்ற பயணி.. ரயிலில் நடுபடுக்கை விழுந்து ஒருவர் உயிரிழப்பு
யானைகளை பார்ப்பதற்காக கொடைக்கானல் மலைச்சாலை 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மாலையில் ஏராளமானோர் குவிகின்றனர். அவர்கள் யானைகளை பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். பழனியை அடுத்துள்ள ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டியில் கொய்யா, மக்காச்சோளம், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இக்கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் காட்டு யானைகள், காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆயக்குடி, சட்டப்பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட யானைகளை ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது யானைகள் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை எந்நேரம் வேண்டுமானாலும் விளை நிலங்களுக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, ''மழை பெய்து வருவதால் வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகிறது. அதனால் விலங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியிலேயே கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இருப்பினும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றனர்