மறக்க முடியுமா? குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 23 உயிர்கள் பறிபோன நாளில் மரியாதையும், அஞ்சலியும்..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு மலை ஏற்றத்திற்காக சென்ற நபர்களில் இருபத்தி மூன்று நபர்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம் நடைபெற்று இன்றுடன்( 11/03/2023) ஐந்து ஆண்டுகள் ஆகிறது
தேனி மாவட்டம் பசுமைப் போர்வை போர்த்திய படி விவசாயதாலும் இயற்கை சூழலும் ரம்மியமாக காணப்படும் மாவட்டமாகும். மாவட்டம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்து உள்ளது மாவட்டத்தில் கூடுதல் சிறப்பாகும். உலகம் முழுவதிலும் உள்ள மலை ஏற்றத்தை விரும்பும் நபர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் செய்ய மிகவும் விருப்படுவர். குறிப்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்லவும், மலை ஏற பயிற்சி பெறவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
எந்த ஒரு அசம்பாவிதத்தையும் கண்டிராத அமைதியான சுற்றுலா தலமான குரங்கணியில் முதல் முறையாக கேட்ட அலறல் சத்தம் இன்று வரை மலை முழுவதும் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. குரங்கணி மலைப்பகுதியில் மலை ஏற்றத்திற்கு சென்ற 39 பேரில் 23 பேர் காட்டுத்தீயில் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தை எவராலும் மறந்திருக்க முடியாது .
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 39 பேர் அடங்கிய இரு குழுக்கள் தேனி மாவட்டம் போடியில் உள்ள குரங்கணி மலை பகுதியில் இருந்து கொழுக்குமலை பகுதிக்கு மலை ஏற்றத்திற்காக சென்றனர். இவர்கள் மார்ச் 10-ஆம் இரவு கொழுக்குமலையிலேயே தங்கிவிட்டு, மறுநாள் (மார்ச் 11ஆம் தேதி) கொழுக்குமலையில் இருந்து குரங்கணி நோக்கி திரும்ப வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கொழுக்குமலை பகுதியில் இருந்து குரங்கணி பகுதிக்கு வர ஒத்தமரம் என்னும் பகுதியை கடந்துதான் வரவேண்டும். இவர்கள் ஒத்தமரம் வழியாக வந்து கொண்டிருந்தபோது, ஒத்தமரம் பகுதியில் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ எரிந்துள்ளது. இந்த காட்டுத்தீயை பெரும் பொருட்டாக கருதாமல் மலை ஏற்றத்திற்கு வந்த நபர்கள் விரைவாக கீழ்நோக்கி சென்று விடலாம் என்ற நோக்கத்தில் அதே வழியாக வந்துள்ளனர்.
ஆனால் கடும் கோடைக்காலம் என்பதால், மலை முழுவதும் மரங்களும் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, காட்டுத் தீ மளமளவென இவர்கள் எதிர்பாராத நேரத்தில் மலை முழுவதும் சூழத் தொடங்கியது . காட்டுத் தீயின் கோரத்தை உணர்ந்த மலை ஏற்றத்திற்கு சென்ற நபர்கள் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு திசையை நோக்கி பள்ளங்கள், பாறைகள் இருக்கும் இடத்தை தேடி ஓடி உள்ளனர். மலை முழுவதும் தீப்பற்றி கொண்டுள்ளதால் பாறைகள், பள்ளங்கள் முழுவதும் கடும் வெப்பம் ஆகியிருந்ததால் நிற்கக்கூட இடம் இல்லாத நிலையில் இருந்துள்ளனர். நொடிப்பொழுதில் பரவிய தீயினால் மலை ஏற்றம் சென்ற அனைவரும் தீயில் சிக்கி பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மீதம் உள்ள நபர்கள் 90% வரை தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மலையிலேயே சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 11 பேர் மட்டும் உயிர் பிழைத்து உள்ளனர். தீ விபத்து குறித்து இவர்கள் அளித்த தகவலின் பெயரில், போடி நகர மக்களும் தீயணைப்புத்துறை, காவல்துறையினர், பேரிடர் மீட்புக்குழு, மருத்துவ குழு என பலரும் விரைவாக மலைப் பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர். தீவிபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் இருந்த நபர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் நான்கு வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இந்த சம்பவம் மக்கள் மனதில் இன்றும் ஆழமாகப் பதிந்துள்ளது.
குரங்கணி காட்டு தீ சம்பவம் குறித்து குரங்கணி மக்கள் கூறுகையில், " சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக குரங்கணி பகுதியில் மலை ஏற்றத்திற்கு பலரும் வந்து செல்வார். அதேபோல தான் அன்றும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மலையேற்றத்திற்காக ஒரு குழு வந்தது. அதிலுள்ள பெரும்பாலும் சிறிய வயது உடையவர்கள். மலை ஏற்றத்திற்கு போவதற்கு முன்பாக அவர்களுக்கு தேவையான குளிர்பானங்கள் தண்ணீர் உணவுப்பொருட்களை இந்த பகுதியில் வாங்கிவிட்டு கொழுக்குமலைக்கு செல்கிறோம் என்று கூறி விட்டுப்போனதே இன்றும் எங்களால் மறக்க முடியாது.
தீ விபத்து பற்றி அறிந்த உடனே என்ன செய்வது பிள்ளைகளை காப்பாற்ற என்ன செய்வது என நாங்கள் இங்கும் அங்கும் ஓடியது நினைவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஆண்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளாக நினைத்து விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற தீ எரிந்து கொண்டிருக்கும்போதும் கூட மலைக்குச் சென்றனர். காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த நபர்களை தூக்கி வந்தது எங்கள் கண்களில் இன்னும் நிற்கிறது. இந்த சம்பவம் நடைபெற்றதில் இருந்து ஒரு வாரமாக தூக்கம் வரவில்லை . தீயில் சிக்கிய குழந்தைகள் போட்ட அலறல் சத்தம் மலை முழுவதும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த மலையை காணும்போதெல்லாம் தீ விபத்து சம்பவம் கண்ணில் வந்து போகிறது" என்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்றதில் இருந்து கோடைக்காலங்களில் மலையேற்றத்துக்கு செல்ல தடை விதித்தும், வனத்துறை அனுமதி இல்லாமல் மலையேற்றத்துக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மறக்க முடியாத நாளான ( மார்ச் 11 ) இன்றும் கூட தேனி மாவட்டம் குரங்கணி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிவது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்