காஞ்சிபுரம்: 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
SIR Draft Voter List: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்"

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து 2,74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 01.01.2026 தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்ற சிறப்பு தீவிரத் திருத்தம் -2026-ன் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 19.12.2025 அன்று வெளியிடப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலை என்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில், தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கு (Rationalisation) பின்பு 1545 ஆக அதிகரிக்கவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11,26,924 ஆகும்.
இறந்தவர்கள் (Death) - 57,658, இரட்டைபதிவு (Double Entry) - 10,719, இடம் பெயர்ந்தவர்கள் (permanently Shifted) - 1,46,621 கண்டறிய முடியாதவர்கள் (untraceable / Absent) - 58,675 மற்றும் மற்றவை (Others) - 601 என நீக்கப்படவுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2,74,274. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
வரைவு வாக்காளர் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.
மேலும் 19.12.2025 அன்று முதல் பெயர் சேர்த்தல் / நீக்கம் / திருத்தம் தொடர்பாக மனுக்களை சம்மந்தப்பட்ட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் மற்யறும் இணையதளம் (Voters.eci.gov.in) வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.





















