காஞ்சிபுரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.. முன்னாள் அமைச்சர் கைது.. நடந்தது என்ன ?
AIADMK : " முன்னாள் அமைச்சர் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது, யார் அந்த சார் ? என கோஷங்கள் எழுப்பி அதிமுகவினர் போராட்டம் "
படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி மாணவி பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் போராட்டத்தில், ஈடுபட உள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
காஞ்சிபுரம் அதிமுக போராட்டம்
இந்தநிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தது.
இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியை மீறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து பேரணியாக நடந்து வந்தனர். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் பேரணியாக வந்த அதிமுகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவினர் கைது
தொடர்ந்து காவலர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பேருந்து மூலம் அழைத்துச் சென்றனர்.
அப்போது பேருந்தின் முன் பகுதியில், யார் அந்த சார் என்ற வாசகங்கள் ஏந்திய போஸ்டர்களை ஒட்டி, நீதி வேண்டும் நீதி வேண்டும் என கோஷமிட்டு கொண்டே சென்றது பொதுமக்களை கவர்ந்தது. தொடர்ந்து வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.