வீட்டில் ஒரே எறும்பு தொல்லை.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்!
பூச்சிகள் தொடங்கி அபாயகரமான விலங்குகள் என பட்டியலிடப்பட்ட உயிரினங்கள் வரை வாழும் நிலையில் அவற்றிற்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு என்பது அரிதாகவே இருக்கும்.

தெலங்கானா மாநிலத்தில் ஒரு இளம்பெண் வீட்டில் உள்ள எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனிதர்கள் வாழும் இவ்வுலகில் பல்வேறு விதமான உயிரினங்களும் வாழ்கின்றன. பூச்சிகள் தொடங்கி அபாயகரமான விலங்குகள் என பட்டியலிடப்பட்ட உயிரினங்கள் வரை வாழும் நிலையில் அவற்றிற்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு என்பது அரிதாகவே இருக்கும். சிலர் உயிரினங்களை விரும்புவார்கள். சிலர் அதனைக் கண்டாலே தெரித்து ஓடுவார்கள். பூச்சிகள், பாம்புகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் என எதனைப் பார்த்தாலும் பயத்துடனும் சிலர் இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எறும்புகளுக்கு பயந்து ஒரு பெண் தற்கொலை வரை செல்வார் என்பது யாரும் எதிர்பாராத ஒன்றாகும். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
நடந்தது என்ன?
இந்த சோக சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒருவர் எறும்புகள் பயத்தால் நவம்பர் 4ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. மூன்று வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அந்த பெண் வசிக்கும் வீட்டில் அதிகப்படியான எறும்புகள் நடமாட்டம் இருந்துள்ளது. இதனை தவிர்க்க அப்பெண் எவ்வளவோ முறை நடவடிக்கை எடுத்தும் அவை குறைந்தபாடில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் வீட்டின் அறையில் இருந்த மின் விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
அதிர்ச்சியில் உறைந்த கணவர்
முன்னதாக தனது வீட்டை சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால் மகளை அருகில் இருந்த உறவினர் ஒருவர் வீட்டில் விட்டு சென்ற பிறகு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதனிடையே காலையில் பணிக்கு சென்ற கணவன் மாலையில் வீடு திரும்பிய போது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டிப் பார்த்தும் திறக்காத நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு ஒரு அறையில் அந்த பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பெண் எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தனது கணவரிடம் மன்னிப்பு கேட்டு, மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் இந்த எறும்புகளுடன் இனியும் வாழ முடியாது எனவும் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறுவயதில் இருந்தே அப்பெண்ணுக்கு எறும்புகள் மீது பயம் இருந்த நிலையில், அதற்காக தான் வசித்து வந்த மஞ்சரியேல் நகரில் சிகிச்சை எடுத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எறும்புகளைப் பார்த்து பயப்படும் மன நிலைக்கு மைர்மெகோபோபியா என்று பெயராகும். இதில் எறும்புகள் பற்றிய தீவிரமான மற்றும் தேவையற்ற பயம் மனதிற்குள் ஏற்படும். இதனால் தேவையற்ற பதற்றம், நடுக்கம் போன்றவை எறும்புகளைப் பார்க்கும்போதோ அல்லது அவற்றைப் பற்றிய எண்ணம் வரும்போது உண்டாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















