Vinesh Phogat : பஜ்ரங் புனியாவை தொடர்ந்து வினேஷ் போகட் அதிரடி.. ராஜ்பாத்தில் விருதை விட்டுச்சென்றதால் பரபரப்பு
பஜ்ரங் புனியாவை போலவே, தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் அறிவித்திருந்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.
அதிர்வலைகளை கிளப்பிய மல்யுத்த வீரர்களின் போராட்டம்:
பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.
பெரும் அழுத்தத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இப்படிப்பட்ட சூழலில், மல்யுத்த கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார்.
கடும் எதிர்ப்புக்கு பிறகும், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் வெற்றி பெற்றிருப்பது மல்யுத்த வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இதை தொடர்ந்து, மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சாக்சி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பிரதமரின் வீட்டின் வெளியே விட்டு சென்றார்.
வாங்கிய விருதுகளை கடமை பாதையில் விட்டு சென்ற வினேஷ் போகட்:
பஜ்ரங் புனியாவை போலவே, தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிக்க உள்ளதாக வினேஷ் போகட் அறிவித்திருந்தார். அதன்படி, தனக்கு அளிக்கப்பட்ட கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை டெல்லியில் உள்ள கடமை பாதையில் (Kartavya Path) வினேஷ் போகட் விட்டு சென்றுள்ளார்.
यह दिन किसी खिलाड़ी के जीवन में न आए। देश की महिला पहलवान सबसे बुरे दौर से गुज़र रही हैं। #vineshphogat pic.twitter.com/bT3pQngUuI
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 30, 2023
பிரதமர் மோடியிடம் விருதுகளை திருப்பி அளிப்பதற்காக அவரின் வீட்டுக்கு செல்ல வினேஷ் போகட் முற்பட்டார். ஆனால், அவரை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதை தொடர்ந்து, வாங்கிய விருதுகளை கடமை பாதையில் விட்டு சென்றுள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை நீளும் கடமை பாதையில் வினேஷ் போகட் நடந்து சென்று விருதுகளை விட்டு செல்லும் வீடியோவை பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறை அதிகாரிகளுடன் வினேஷ் போகட் உரையாடுவது பதிவாகியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா, கடந்த 2020 ஆம் ஆண்டு, வினேஷ் போகட்டுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2016இல், அவருக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது.