PM Narendra Modi : சைக்கிள்.. மகாத்மா காந்தி.. பிரதமர் மோடி சொன்ன சுவாரஸ்யம்..
வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவர்? மோடி பெருமிதம்!
உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியின் படத்தை பகிர்ந்து அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உலக மிதிவண்டி தினத்திற்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலக சைக்கிள் தினத்தன்று ’சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் முறை’(Lifestyle for Environment (LIFE)) என்ற கருத்தை முன்னிறுத்தி மகாத்மா காந்தி சைக்கிளில் செல்லும் புகைப்படத்துடன் “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (லைஃப்)’ :- இன்று சர்வதேச மிதிவண்டி தினம். நாம் நிலைத்த ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னேடுக்க, மகாத்மா காந்தியைவிட சிறந்த முன்னுதாரணம் யார்? நாம் ஆரோக்கியமான வாழ்வியலை முன்னெடுக்க மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் உத்வேகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.” என்றார்.
Lifestyle for Environment (LIFE).
— Narendra Modi (@narendramodi) June 3, 2022
It is World Bicycle Day today and who better than Mahatma Gandhi to take inspiration from to lead a sustainable and healthy lifestyle. pic.twitter.com/r6hclQGjkd
ஒருகாலத்தில் போக்குவரத்திற்கு பயன்பட்ட சைக்கிள்கள், மோட்டார் வாகனங்கள் ஆதிக்கத்தால் அழிவைச் சந்தித்து வருகிறது. அதை மீண்டும் மீட்டெடுக்கவும், அனைவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம் ஒன்றை தேர்ந்தெடுப்பதை ஊக்கப்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
உலக சைக்கிள் தினத்தையொட்டி, மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாகூர், இந்தியா கேட் பகுதி மேஜா் தியான் சந்த் மைதானத்தில் தேசிய அளவிலான சைக்கிள் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா்.
தியான் சந்த் மைதானத்திலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியில் சுமாா் 1500 போ் பங்கேற்றனா். புதுடெல்லி ஷாஜகான் சாலை, எ.பி.ஜே. அப்துல் காலம் சாலை, ஜன்பத், ஃபெரோஸ்ஷா சாலை, பகவான்தாஸ் சாலை, திலக் மாா்க் என 7.5 கி.மீ தூரம் இப்பேரணி நடைபெற்றது.நேரு யுவகேந்திரா சங்கதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாகூர் பேசுகையில், ‘இந்தியா சுதந்திரமடைந்து 75-வது கொண்டாட்ட ஆண்டில் இருக்கிறோம். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க மிதிவண்டி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமா் மோடி, ஃபிட்னஸ் பிரசாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என விரும்புகிறாா். ஃபிட்னஸ் இந்தியா பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டுதல் மிகப்பெரும் பங்காற்ற முடியும். இதனால், உடல் ஆரோக்கியத்திற்காக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் பயன்பாடு ஒரு அங்கமாக மாற வேண்டும். இது ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்’ என்றாா்.
இந்நிகழ்வில் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, வெளியுறவு, கலாச்சாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி,மக்களவை உறுப்பினா்கள் ஹர்ஷ் வா்தன், மனோஜ் திவாரி, ரமேஷ் பிதூரி மற்றும் அமைச்சக அதிகாரிகள் மிதிவண்டி பேரணியில் பங்கேற்றனா்.