(Source: ECI/ABP News/ABP Majha)
30 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. ஆனாலும் குற்றவாளிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.. ஏன்?
30 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 73 வயது முதியவருக்கு எதிராக பெண் தொடர்ந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 73 வயது முதியவருக்கு எதிரான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதற்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிபதிகள் ஏ. எஸ். கட்கரி மற்றும் நீலா கோகாய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் பின்னணி என்ன?
குற்றம்சாட்டப்பட்ட ஆணின் நிறுவனத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட பெண் சேர்ந்துள்ளார். அந்த நேரத்தில், அந்த பெண்ணுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 வரையில், 30 ஆண்டுகளாக, கல்யாண், பிவாண்டி மற்றும் பிற இடங்களில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் வைத்து அந்த பெண்ணை குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளார்.
அவரை திருமணம் செய்து கொள்வதாக பெண்ணுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 1993ஆம் ஆண்டு, அவருக்கு தாலி கட்டியுள்ளார். இரண்டாவது மனைவியாக அவரை அறிவித்துள்ளார். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள அந்த பெண்ணை அவர் அனுமதிக்கவில்லை.
கடந்த 1996ஆம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், அவரின் நிறுவனத்தை அந்த பெண் கவனித்துக்கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தனது தாயாருக்கு புற்றுநோய் ஏற்பட்டதால், அவரை கவனித்து கொள்ள அந்த பெண் தனது வேலையிலிருந்து விடுப்பு எடுத்து சென்றார்.
நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு: மீண்டும் நிறுவனத்திற்கு வந்தபோது, அலுவலகம் மூடப்பட்டிருப்பதையும் நிறுவனத்தின் கேட் பூட்டப்பட்டிருப்பதையும் அவர் கண்டார். அந்த நபருடன் தொடர்பு கொண்டபோது, தன்னை திருமணம் செய்ய அவர் மறுத்துள்ளார்.
இச்சூழலில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரின் சம்மதத்துடன் பாலியல் உறவில் இருந்தது தெரிய வந்தது. "இருவரும் 31 ஆண்டுகளாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் உறவுக்கு ஆட்சேபனை தெரிவித்தது பற்றி புகார்தாரர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இரு தரப்பினருக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு, அதன் பிறகு புகார்தாரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.