Tomato Issue : தக்காளியால் பிரிந்த கணவன் - மனைவி... தக்காளிகளால் வந்த வினை.. மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தில் தக்காளியால் கணவன் - மனைவி பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
தக்காளியின் விலை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. இதனால் சிலர், தக்காளியைத் தவிர்த்துவிட்டு அது இல்லாத உணவுகளைச் சமைத்து வருகின்றனர். யூடியூபில் தக்காளி இல்லாத ரெசிபி வகைகளை ஏராளமானோர் தேடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தக்காளியால் பல்வேறு விநோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துள்ளது.
மத்திய பிரதேசம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். இவர் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர், சமீபத்தில் தனது மனைவியிடம் கேட்காமல் இரண்டு தக்காளிகளைப் பயன்படுத்தி சமைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சஞ்சீவ் புர்மனின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சஞ்சீவ் பர்மன் கூறுகையில், ”சமையலின்போது இரண்டு தக்காளிகளைப் பயன்படுத்தி சமைத்ததால், எனக்கும் என் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் என் மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் திரும்பி வந்துவிடுவர்கள் என்று நினைத்தேன்.ஆனால் அவர்கள் வரவில்லை. அவர்களை எல்லா இடங்களிலும் தேடிய பின்பும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளேன். 3 நாட்களாக என் மனைவியிடம் பேசவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகரத்தில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க