Electoral bonds case: தேர்தல் பத்திரங்கள் வழக்கில் ட்விஸ்ட்! நிம்மதி பெருமூச்சு விட்ட பா.ஜ.க. அரசு - உத்தரவில் இதை கவனிச்சீங்களா?
பல முக்கியமான வழக்குகளில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுகிறது.
ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றாக கருதப்படும் நீதித்துறை மீது கடந்த சில ஆண்டுகளாகவே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல முக்கியமான வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைபாட்டையே உச்ச நீதிமன்றம் எடுத்ததாக அதன் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முக்கிய வழக்குகள்:
அயோத்தி பாபர் மசூதி, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ திருமண அங்கீகாரம் வழங்குவது, எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை பயன்படுத்துவது உள்பட பல வழக்குகளில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கின் பின்னணி:
தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்படும் பெரும்பாலான நன்கொடை பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம் பாஜகவுக்கு சென்றதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
பா.ஜ.க.வுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியதா உச்ச நீதிமன்றம்?
கூடுதல் அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, வங்கியிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றன எனக் கூறி, நாளைக்குள் விவரங்களை சமர்ப்பிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. எஸ்.பி.ஐ. சமர்ப்பிக்கும் விவரங்களை தங்களின் இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவில்தான் சர்ச்சை எழுந்துள்ளது. விவரங்களை வெளியிட சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், யார் கொடுத்த நன்கொடை யாருக்கு சென்றது என்பது குறித்து தகவலை வெளியிட தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின்படி, தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு நன்கொடை கொடுத்தார்கள் என்பது பற்றிய தகவலையும், எந்த அரசியல் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றார்கள் என்பது பற்றிய தகவலையும் தனித்தனியே சமர்பிக்க எஸ்.பி.ஐ. வங்கி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், யார் கொடுத்த நன்கொடை எந்த அரசியல் கட்சிக்கு சென்றது என்பது குறித்து தெரியவராது என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பத்திரத்தை வாங்கியது யார்? அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சி எது? யார் அளித்த நன்கொடை யாருக்கு சென்றது? என்பது பற்றிய தகவலை தேர்தல் பத்திரங்களை விற்ற எஸ்.பி.ஐ வங்கி வெளியிடாத வரை இதில் மர்மமே நீடிக்கும் என மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: Electoral Bonds case: தேர்தல் பத்திர வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!