Pahalgam Attack: தீவிரவாதிகளை தீரத்துடன் எதிர்கொண்ட முஸ்லிம் இளைஞர் வீர மரணம்; யார் இந்த சையது உசேன்?
Jammu Kashmir News: பஹல்காமில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முயன்று வீர மரணமடைந்த முஸ்லிம் இளைஞர் சையது உசேன் அதில் ஷா குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப். 22) மாலை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதால் இதில் மனைவி கண் முன்னாலேயே ஏராளமான கணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தாக்குதலில் தப்பித்தவர்களும் அவர்களின் உறவினர்களும், கொல்வதற்கு முன்பு நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியதாகக் கூறினர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆண்களுமே குறிவைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீர மரணமடைந்த முஸ்லிம் இளைஞர்
இந்த நிலையில் பஹல்காமில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முயன்று வீர மரணமடைந்த முஸ்லிம் இளைஞர் சையது உசேன் அதில் ஷா குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
பஹல்காம் பகுதியைச் சேர்ந்த குதிரை ஓட்டி சையது உசேன். அவர் நேற்று வழக்கம்போல பணிக்குச் சென்றுள்ளார். பஹல்காம் பகுதியில் இருந்து பைசரன் பள்ளத்தாக்குக்குக் குதிரை மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது இவரின் வழக்கம்.
தாக்குதலைத் தடுக்க முயன்ற சையது உசேன்
நேற்று யாரும் எதிர்பாராத சூழலில், பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது தாக்குதல்காரர்களிடம், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று சையது உசேன் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவரைத் தடுக்கவும் முயன்றுள்ளார்.
இதில் கோபமடைந்த தீவிரவாதிகள், சையது உசேனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சையது உசேன் வீர மரணமடைந்தார். காஷ்மீர் விருந்தினர்களைக் காப்பற்ற முயன்ற ஒரே காரணத்துக்காக, உள்ளூர் இளைஞரான சையது உசேன் கொல்லப்பட்டார். இவருடன் மொத்தம் 28 பேர் உயிரிழந்தனர்.
குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர்
மரணமடைந்த இளைஞர் சையது உசேன் அதில் ஷாதான் குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த ஒரே நபர் ஆவார். வயதான தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் எல்லோரும் இப்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து சையது உசேனின் தந்தை, சையது ஹைதர் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ’’நேற்று எனது மகன் வழக்கம்போல் வேலையாக பஹல்காம் சென்றிருந்தான். 3 மணி வாக்கில் தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டோம். அவனுக்கு அழைத்தோம். ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 4.40 மணி வாக்கில், போன் ஆன் செய்யப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும்
உடனே காவல் நிலையம் சென்றோம். அங்குதான் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்தோம். என் மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.






















