(Source: ECI/ABP News/ABP Majha)
Patriotism And Social Media: எதெல்லாம் தேசபக்தி..! இதெல்லாம் மட்டும்தான் பெருமையா?.. மக்களின் நினைப்புதான் என்ன?
சமூக வலைதலங்களின் உதவியுடன் இந்தியாவில் தேசபக்தி என்ற ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டு, எதற்காக என்றே தெரியாமல் சில விஷயங்களை கொண்டாடுவது வாடிக்கையாகிவிட்டது.
சமூக வலைதளங்களின் வளர்ச்சி சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பொய்யான பிம்பத்தை தேசபக்தி என கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.
எது வளர்ச்சி:
ஒவ்வொரு தனிநபரின் முன்னேற்றம்தான், ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றம். அனைத்து நபர்களுக்குமான அடிப்படை வசதிகளையும் ஒரு அரசு ஏற்படுத்தி தருமாயின், அதைவிட பெருமை ஒரு அரசுக்கு கிடைத்துவிடப்போவதில்லை. ஆனால், அத்தகைய எந்த வளர்ச்சிப் பணிகளுக்காக தேசபக்தி என்ற ஒற்றை வார்த்தை மூலம் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மோசமான பிம்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதை கண்கூட கண்டாலும், அதன் விளைவுகளை உணர முடியாத வாழ்வியல் முறையின் நாம் சிக்கியுள்ளோம். சமூக வலைதளங்கள் நமக்கு ஊட்டியுள்ள மோகம் அத்தகையது.
இதெல்லாம் தான் பெருமையா?
இந்திய அணி ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறும் போதும், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என கணக்கு வைத்திருக்கும் அனைத்து சமூக வலைதளங்களிலும் கொண்டாடி மகிழ்கிறோம். அதுமட்டுமின்றி, சுதந்திர தினம், குடியரசு தினம், அன்னையர் தினம் போன்றவையெல்லாம் வந்துவிட்டால் போதும் அதுதொடர்பான கருத்துகள், கமெண்ட்கள், ஸ்டேடஸ்கள், டிபிக்கள் மற்றும் ரைட்-அப்கள் மூலம் சமூக வலைதளங்கள் நிரம்பி வழிகின்றன. இதோடு அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி, ராணுவ வீரர்களின் சாகசங்கள் போன்றவை எல்லாம் வந்துவிட்டால், அவ்வளவு தான் ஒவ்வொருவருக்கும் பொங்கி வரும் தேசபக்தி எனும் கடலை எவராலுமே கட்டுப்படுத்த முடிவதில்லை.
என்ன பலன்?
இப்படிப்பட்ட பதிவுகள் மூலம் நீங்கள் இந்த சமூகத்திற்கு சொல்ல வருவது என்ன? அந்த பதிவுகளுக்கு நாம் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறோம் என என்றேனும் சிந்தித்து இருக்கிறோமா? (ஊரே போடுகிறது நாம் போடாவிட்டால் நமக்கு தேசபக்தி இல்லை என கருதிவிடுவார்கள் என பயந்து, எதையாவது பதிவிடுவது எல்லாம் தனிக்கதை)
விடையில்லா கேள்விகள்:
- அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் பிறந்தநாட்களை மட்டும் கொண்டாடுகிறோமே, அவர்களின் சொன்ன அறிவுரையை பின்பற்றி இருந்தால் சமூகத்தில் ஏன் இன்னுமும் இந்த ஏற்றத்தாழ்வுகள் நிலவப்போகிறது?
- தாய், தந்தையே தெய்வம் என பக்கம் பக்கமாக ரைட்-அப்கள் போடுவதெல்லாம் உண்மை என்றால், இன்னும் ஏன் எத்தனையோ முதியோர் இல்லங்கள் செயல்பாட்டில் உள்ளன. லட்சக்கணக்கான முதியோர் கேட்க யாருமின்றி சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்?
- ”எல்லார்க்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும்” என்ற கடவுளை கொண்டுகிறோம், அவர் சொன்னபடி நாம் நடந்தால் தினந்தோறும் கோடிக்கணக்கானோர் ஏன் பசியுடன் இரவில் தூங்க செல்கின்றனர்?
- சம்பளமே வாங்காத கவுன்சிலர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாறிக் கொண்டிருக்கையில், என் தலைவன் ஆட்சிக்கு வந்தால் எல்லாமும் மாறும் என எந்த நம்பிக்கையில் கூக்குரலிடுகிறோம்?
- விண்ணில் யாரும் தொடமுடியாத நிலவின் தென் துருவத்தை ஆராய கோடிகளை கொட்டும் அதே வேளையில், மண்ணுக்கு அடியில் உள்ள சக மனிதனின் மலக்கழிவை எடுக்க குறிப்பிட்ட சமூகத்தினர் கட்டாயப்படுத்தப்படுவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
- வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என நாட்டின் தலைவர் உறுதியளித்த பிறகும், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பது ஏன்?
- தேசபக்தி என்ற பெயரில் உணர்ச்சி ததும்ப பல பதிவுகளை வெளியிடும் நம்மில் எத்தனை பேர் மணிப்பூர் கலவரம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் கவிழ்க்கப்படுவது, ஊழல்வாதிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவது, சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், விவசாயிகள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறோம்?
சிந்திக்கிறோமா?
சமூக வலைதளங்கள் மூலம் எத்தனையோ புரட்சிகளையும், மாற்றங்களையும் செய்ய முடியும். அதற்கு ஜல்லிக்கட்டை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறு இல்லை. ஆனால், ”ஊரோடு ஒத்துப்போவோம்” என்ற பொத்தாம் பொதுவான போக்கில் தான், பெரும்பாலானோர் வாழ்ந்து வருகிறோம். அதனால் தான் ”ஒருநாள் கூத்து” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அன்றைய நாளில் என்ன பேசுபொருளாக உள்ளதோ, அதுதொடர்பாக எதையாவது சமூக வலைதலங்களில் பதிவிட்டு தங்களது கடமையை பூர்த்தி செய்து விடுகிறோம்.
பெருமைப்படவேண்டாமா?
சர்வதேச அளவில் இந்தியா தழைத்தோங்க வேண்டியது அவசியம் தான். உலக நாடுகளால் செய்ய முடியாததை இந்தியா செய்தால், அது நமக்கான பெருமை தான். அதேநேரம், இன்றைய அடிப்படைக்கு இல்லாத முக்கியத்துவம், நாளை எனும் நிச்சயம் இல்லா எதிர்காலத்திற்கு வழங்கப்படுவது நியாயம் தானா? என்பதையும் அனைவரும் சிந்திக்க வேண்டியது அவசியம்தானே. சமூகவலைதளங்களில் எல்லாரும் கொண்டாடுகிறார்களே என நாமும் அந்த கூட்டத்தில் சேர்ந்து, லைக்ஸ்களுக்காகவும், கமெண்ட்ஸ்களுக்காகவும் எதையாவது பதிவிடுவதற்கு பதிலாக, சமகால பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதும் ஒரு பெருமைக்குரிய முயற்சி தான்..! நாட்டின் முழுமயான வளர்ச்சிக்கான ஒரு உந்துதலை நீங்கள் தருவீர்கள் என்றால் அதுவும் தேசபக்திதான்..!