மச்சினிச்சியின் தலையுடன் ரோட்டில் உலா வந்த நபர்.. பார்த்து பதறிய மக்கள்.. போலீசுக்கு பறந்த தகவல்
நபர் ஒருவர், தனது மச்சினிச்சியின் துண்டிக்கப்பட்ட தலையை சுமந்துகொண்டு அப்பகுதியில் சுற்றித் திரிவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேற்குவங்கத்தில் பெண் ஒருவரை கொன்றுவிட்டு அவரது தலையுடன் கொலைகாரர் சாலையில் உலா வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னர் நடந்த விசாரணையில் கொல்லப்பட்ட பெண், அவருடைய மச்சினிச்சி என்பது தெரிய வந்தது.
மச்சினிச்சியின் தலையை வெட்டி எடுத்த கொடூரன்:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. கடந்தாண்டு, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்குவங்கம் மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நபர் ஒருவர், வெட்டப்பட்ட பெண்ணின் தலையுடன் சாலையில் உலா வந்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் மேற்கொண்ட காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட பெண், அவருடைய மச்சினிச்சி என்பது தெரிய வந்தது.
பார்த்து பதறிய மக்கள்:
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் தனது மச்சினிச்சியை கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் தனது மச்சினிச்சியின் துண்டிக்கப்பட்ட தலையை சுமந்துகொண்டு அப்பகுதியில் சுற்றித் திரிவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மச்சினிச்சியான அந்தப் பெண்ணுடன் நேற்று இரவு சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவர் அரிவாள் போன்ற பொருளால் அந்தப் பெண்ணின் தலையை துண்டித்துவிட்டார். சம்பவம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். குற்றம் நடந்த இடத்திற்கு தடயவியல் குழு சென்று ஆய்வு செய்து வருகிறது. பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் சமீபத்தில் அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார். அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















