West Bengal Election Result: மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தல்; திரிணாமுல் காங்கிரஸ் அபார முன்னிலை
மேற்கு வங்காள கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 8-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தல்:
ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட்ட இந்த தேர்தலில் பல இடங்களில் ஏற்பட்ட வன்முறை மேற்கு வங்காளத்தையே அதிர வைத்தது. திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தங்களுக்குள் மோதிக்கொண்டதால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இந்த வன்முறையால் 18 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளத்தில் 3 ஆயிரத்து 317 கிராம பஞ்சாயத்து இடங்களும், 341 பஞ்சாயத்து சமிதி இடங்களும், 20 ஜில்லா பரிஷத் இடங்களுக்கான முடிவுகள் தறபோது வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நிலவரப்படி, அதாவது, காலை 11.30 மணி நிலவரப்படி கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 681 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாயத்து சமிதியில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 66 கிராம பஞசாயத்து இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் அபாரம்:
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 607 இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற இடங்கள் உள்பட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் சேர்த்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காலை முதலே ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலுவாக முன்னிலையில் உள்ளதால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மிக மோசமாக அரங்கேறிய வன்முறைக்கு மத்தியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 73 ஆயிரத்து 887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.
மேலும் படிக்க: இரத்தமும் நெருப்பும் சூழ நடந்து முடிந்த வாக்குப்பதிவு… மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று!
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.127 .49 கோடி சொத்து குவிப்பு: பெட்டி பெட்டியாக தாக்கல் செய்யப்பட்ட 18 ஆயிரம் ஆவணங்கள்