Mamata Banerjee Delhi Visit: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுப்ரமணிய சுவாமியை சந்திப்பதாக தகவல்.
பாஜக அரசின் குறைகளையும், முரண்பாடுகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வரும் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமியையும், மம்தா பேனர்ஜி இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நான்கு நாட்கள் டெல்லி பயணம் மேற்கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இன்று பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மேலும், நரேந்திர மோடி தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் குறைகளையும், முரண்பாடுகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வரும் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமியையும் மம்தா பேனர்ஜி இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு:
இன்று பிரதமரை சந்திக்கும் மம்தா பேனர்ஜி,"பஞ்சாப், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்திய சர்வதேச எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பை 50 கி.மீ. ஆக அதிகரித்த முடிவு, திரிபுரா மாநிலத்தில் அரங்கேறிவரும் அரசுப் பயங்கரவாதம், நிதிப் பங்கீடு" உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்க உள்ளார்.
மம்தாவின் டெல்லி அரசியல்:
தேசிய அரசியலில் தனது செல்வாக்கை அதிகப்படுத்த துடிக்கும் மம்தா பேனர்ஜி, இந்த டெல்லி பயணத்தை மிகவும் சாதூர்யமாக பயன்படுத்தி வருகிறார். நேற்று, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களான கிர்தி அசாத் மற்றும் அசோக் தன்வார் ஆகியோர் மம்தா முன்னிலையில் தங்கள் திரிணாமுல் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
ஒருகாலத்தில்,ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட தன்வர்,ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருந்து வந்தார். கருத்து முரண்பாடுகள் காரணமாகவும், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத காரணித்தினாலும் 2019ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அசோக் தன்வார் மூலம் , ஹரியானா அரசியலில் கால்பதிக்கும் முயற்சியில் மம்தா இறங்கியுள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் திருணாமுல் காங்கிரஸ் முக்கிய பலம் பொருந்திய கட்சியாக உருவெடுக்கும் என்றும் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
Why Didi targeting Congress?
— Manoj Prabakar S (@imanojprabakar) November 24, 2021
Is this mission 2024?#Mamata
அதே போன்று, பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கிர்தி அசாத்-ம் பேனர்ஜி முன்னிலையில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1983ல் உலககோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்.இதற்கிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடைபெற்ற லக்கிம்பூர் கலவரத்தை விமர்சித்து வந்த வருண் காந்தியையும் மம்தா பேனர்ஜி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.