விலை குறைந்த ஆடை.. திருமணத்தையே நிறுத்திய மணப்பெண்.. அதிர்ந்து நின்ற உறவினர்கள்..
விலை குறைவான லெஹங்காவை மணமகன் வாங்கிக் கொடுத்ததால் கவலையில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வரதட்சணைக் கொடுமை, மோசடி உள்ளிட்ட பல காரணங்களுக்காக திருமண மேடை வரை சென்று நின்ற திருமணங்கள் ஏராளமாக உள்ளன.
ஆனால் இவற்றிலிருந்து மாறுபட்டு மணமகன் வீட்டார் விலை குறைவான லெஹங்காவை வாங்கிக் கொடுத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் ஹல்த்வானியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அல்மோராவைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு அவரைத் திருமணம் செய்யவிருந்த மணமகனின் வீட்டார் 10,000 ரூபாய் மதிப்புள்ள லெஹங்காவை வாங்கியுள்ளனர். திருமண லெஹங்காக்களுக்கு பேர்போன வட இந்திய மாநிலங்களில், இவற்றுக்காக மட்டுமே பல ஆயிரங்கள் தொடங்கி லட்சங்கள் வரை செலவழிக்கப்படுகின்றன. இந்நிலையில், தன் திருமணத்துக்கு வருங்காலக் கணவரின் வீட்டார் வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக மணப்பெண் கவலையில் இருந்துள்ளார்.
முன்னதாக 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லெஹங்காவை பெண்ணின் வருங்கால மாமனார் வாங்கி அனுப்பிய நிலையில், மனமுடைந்த இப்பெண் தன் திருமணத்தையே நிறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து, இந்த நவம்பர் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், திருமண நடைபெறவிருந்த சில நாள்களுக்கு முன் திருமணத்தை மணப்பெண் நிறுத்தியது, இரு வீட்டாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து கோட்வாலி காவல் துறையினரை மணமகன் வீட்டார் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். மேலும், திருமண அழைப்பிதழ்களை ஏற்கனவே அச்சடித்துவிட்டதாகக் கூறியும், மணப்பெண்ணை சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்கும்படியும் மணமகன் வீட்டார் கோரியுள்ளனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் தலையிட்டு சமரசம் பேச முயன்ற காவல்துறையினர் தங்கள் முயற்சியில் தோற்று, இறுதியாக இரு வீட்டாரையும் சமாதானம் செய்து அவரவர் பாதையில் அனுப்பி வைத்தனர்.
லெஹங்காவால் திருமணமே நின்றுபோன இந்த விநோத சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது. இதேபோல் முன்னதாக தன்னுடைய திருமணத்துக்கு சக ஊழியர்கள் வரவில்லை என்பதற்காக மணப்பெண் எடுத்த வித்தியாசமான முடிவு பேசுபொருள் ஆனது.
சீனாவின் ஒரு பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு கொரோனா காலம் என்பதால் அப்பெண் குறைவாக விருந்தினர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய அலுவலகத்தில் உடன் பணியாற்றும் 70 நபரை திருமணத்திற்கு அழைத்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவையும் தயார் செய்துள்ளார். இந்தச் சூழலில் அவருடைய திருமணத்தன்று உடன் பணியாற்றும் நபர்களில் ஒருவர் மட்டுமே வந்துள்ளார். இதனால் அவர் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த சுமார் 6 டேபிள்கள் நிறையே சாப்பாடு வீணாகியுள்ளது.
இதன்காரணமாக அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தன்னுடைய திருமணம் முடிந்த அடுத்த நாளில் அப்பெண் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் தன் திருமணத்திற்கு உடன் பணியாற்றும் நபர்கள் யாரும் வரவில்லை என்று கூறி ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.