"நிலச்சரிவு ஏற்படும் என கேரளாவுக்கு முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது" மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும், அதனால் மரணங்கள் நிகழலாம் என கேரளாவுக்கு முன்கூட்டியே அதாவது ஜூலை 23ஆம் தேதியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையுமே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 200-க்கு மேற்பட்டோர் பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
தேசத்தை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு: இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்படும், அதனால் மரணங்கள் நிகழலாம் என கேரளாவுக்கு முன்கூட்டியே அதாவது ஜூலை 23ஆம் தேதியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுகுறித்து விரிவாக பேசிய அமித் ஷா, "வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. ஒன்பது தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவிற்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டன.
ஆனால், கேரள அரசு உரிய நேரத்தில் மக்களை வெளியேற்றவில்லை. இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கையை ஏழு நாட்களுக்கு முன்பே வழங்கக்கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வந்ததைத் தொடர்ந்து.
நாடாளுமன்றத்தில் அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்: கேரள அரசு எச்சரிக்கையாக இருந்திருந்தால், நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திருக்கலாம். வயநாடு பேரிடரை சமாளிக்க கேரள அரசு மற்றும் மக்களுடன் பாறை போல் துணை நிற்கிறது நரேந்திர மோடி அரசு" என்றார்.
நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் நேற்று இரவு கேரளா விரைந்தார். "நிலைமையை மத்திய அரசு உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகிறது. நிலைமையை பிரதமர் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட என்னை அனுப்பியுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் இரு கட்டுப்பாட்டு அறைகளும் 24x7 நிலைமையை கண்காணித்து, மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன" என ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணியில் அந்த மாநில பேரிடர் குழுவினருடன் ராணுவம் மற்றும் விமானப்படையினரும் இணைந்துள்ளனர். தமிழ்நாடு அரசும் தங்களது மாநில பேரிடர் மீட்புக்குழுவை அனுப்பி வைத்துள்ளது. நேற்று காலை முதல் அங்கு பல இடங்களில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர். பல நேரங்களில் தொடர்ந்து மோசமாக மழை பெய்ததால் ஹெலிகாப்டரால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.