"பிடி உஷா எந்த ஆதரவும் தரவில்லை! ஒலிம்பிக்கிலும் அரசியல்" வெளுத்து வாங்கிய வினேஷ் போகத்
இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் பிடி உஷா எந்த ஆதரவும் தரவில்லை என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விமர்சித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி புது வரலாறு படைத்தவர் வினேஷ் போகத். துரதிஷ்டவசமாக அதிக எடை காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தது.
பி.டி.உஷா - வினேஷ் போகத் புகைப்படம்:
உடல் எடையை 50 கிலோவிற்கு கொண்டு வருவதற்காக போட்டிக்கு முந்தையை நாள் இரவு முழுவதும் கடுமையான உடற்பயிற்சி செய்தார். தூக்கமில்லாமல் இரவு முழுவதும் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் அனுமதிக்கப்பட்டிந்தபோது அவரை இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவரும், முன்னாள் தடகள வீராங்கனை பிடி உஷா நேரில் சென்று சந்தித்தார். பிடி உஷா வினேஷ் போகத்தைச் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து வினேஷ் போகத் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
ஆதரவு அல்ல:
பிடி உஷா வந்து சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள வினேஷ் போகத், இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பாக பிடி உஷா எந்த ஆதரவும் தரவில்லை. நீங்கள் மருத்துவமனை படுக்கையில் இருக்கும்போது, வெளி உலகில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் வாழ்வில் மோசமான சூழலில் இருக்கிறீர்கள். அந்த நேரத்தில் என்னுடன் துணை நிற்பதாக காட்டிக் கொள்வதற்காக என்னிடம் சொல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள் நீங்கள்( பிடி உஷா). சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு எனக்கு உறுதுணையாக இருப்பதாக கூறினீர். நீங்கள் தெரிவிப்பது ஆதரவு அல்ல.
எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பிடி உஷா என்னைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். ஒரு போட்டோ எடுத்துள்ளனர். மறைமுகமாக அரசியலில் நிறைய நடக்கிறது. பாரிசிலும் அரசியல் நடந்தது. அதனால்தான் மனம் நொந்து போனேன். மல்யுத்தத்தை விட்டுவிடாதே என்று பலரும் சொன்னார்கள். எதற்காக தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் இருக்கிறது” வினேஷ் போகத் இவ்வாறு பேசினார்.
ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரஜ்பூஷன்சிங்கிற்கு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வினேஷ் போகத் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.